"அரசியல் கட்சிக் கொடிகள், மணல் லாரிகளுக்கு தடா!’’ - அசத்தும் வாங்கப்பாளையம்Sponsored"இன்றைக்கு ஆளாளுக்குக் கட்சி ஆரம்பித்து கிராமங்கள்தோறும் கொடியேற்றி அரசியல்ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார்கள். அதோடு, எங்கு பார்த்தாலும், 'நாளைய முதல்வரே', 'எங்கள் எதிர்காலமே' என்றெல்லாம் வாசகங்களை வேறு ஃப்ளெக்ஸ் பேனர்களாக அடித்து, மூலைக்கு மூலை கட்டிவைத்து, கடந்து செல்லும் மக்களுக்கு ஏக அல்லல்களை ஏற்படுத்தி வருகிறார்கள். கோவையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி, விபத்துகுள்ளானதில் ரகு என்ற இளைஞர் உயிரிழந்த கொடுமையும் நடந்தது. ஆனால், எங்க ஊரில் அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை" என்று பெருமிதத்துடன் சொல்கிறார்கள் கரூர் மாவட்டம் வாங்கப்பாளையம் கிராம மக்கள்.

வாங்கப்பாளையம் கிராமம் முழுக்க, 'அரசியல் கட்சிகள் சார்ந்த கொடிக்கம்பங்களோ, போர்டுகளோ வைப்பதற்கு அனுமதியில்லை', 'கோயில் கிணத்துப் பகுதியை சுற்றி ஃப்ளெக்ஸ் போர்டுகளுக்குத் தடை', 'மணல் லாரிகள் ஊருக்குள் செல்லத் தடை' என்று ஏகப்பட்ட தடைகளை விதித்து, அந்தக் கட்டுப்பாடுகளை எல்லோரையும் உறுதியுடன் பின்பற்ற வைத்து அசத்தி வருகிறார்கள், அந்தக் கிராம மக்கள்.

Sponsored


கரூரில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும்வழியில் வெங்கமேடு அருகில் உள்ள கிராமம் வாங்கப்பாளையம். இந்தக் கிராம மக்கள் எந்தவித சண்டை சச்சரவும் இன்றி, சாதி, மதப் பாகுபாடோ, அரசியல்ரீதியான வேறுபாடுகளோ இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். அதற்குக் காரணம், ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்துள்ள முடிவுகள்தான். அந்த ஊரின் நிலைபற்றி அறிந்துவர அங்கு விசிட் அடித்தோம். ஊரே உஜாலாவுக்கு மாறியதுபோல் சுத்தமாக இருந்தது. அந்த ஊரில் உள்ள கிணறுகள் அனைத்திலும் பிளாஸ்டிக் பொருள்கள், கழிவுகள், குப்பைகள் போன்றவை மிதக்காமல் 100 சதவிகிதம் தூய்மையாக இருந்தன. கிணறுகளில் மீன்கள் நீந்துவது ஸ்படிகம் போன்று நம் கண்களுக்கு பளிச்செனத் தெரிந்தது. கிராமம் முழுவதும் சுற்றி வந்தோம். ஒரு ஃப்ளெக்ஸ் பேனரைக்கூடப் பார்க்க முடியவில்லை. அதேபோல் எந்தவொரு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களையோ, போர்டுகளையோ காணமுடியவில்லை. 

Sponsored


இந்த ஆச்சர்ய மாற்றம் பற்றி ஊர் முக்கியப் புள்ளியான முருகையனிடம் பேசினோம்.

"நான்கு வருடங்களுக்கு முன்புவரை, மற்ற இடங்களைப் போன்று எங்க ஊர்லயும் எங்கு பார்த்தாலும் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இருந்துச்சு. ஆளாளுக்கு அவங்க கட்சி சார்ந்து ஊர் முழுக்க ஃப்ளெக்ஸ் போர்டுகளை வைப்பாங்க. இதனால் இந்தக் கிராமத்தில் நாங்க எல்லோரும் மாமன், மச்சான், அண்ணன், தம்பி என ஒற்றுமையா வாழ்ந்து வந்துக்கிட்டு இருக்கறப்போ, பிரச்னை ஏற்பட்டுச்சு. கட்சிகளைக் காரணம்காட்டி ஆளாளுக்கு அடிச்சுக்கிட நேர்ந்துச்சு. தேர்தல் நேரத்துல இன்னும் பிரச்னைகள் அதிகமாச்சு. கட்சிக்காக சொந்த அண்ணன், தம்பிகளே விரோதம் பாராட்டுற கொடுமைகள்கூட நடந்துச்சு. அதனால்தான், ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து முடிவு பண்ணி, நாலு வருஷத்துக்கு முன்பு மேற்கண்ட கட்டுப்பாடுகளை விதிச்சோம். 'நீங்க எந்த கட்சிக்காரனா வேண்டுமானாலும் இருங்க. யாரை வேண்டுமானாலும் ஆதரிங்க. ஆனா, அதை கொடிக்கம்பங்களாகவோ, ஃப்ளெக்ஸ் போர்டுகளாகவோ ஊரில் வைக்கக் கூடாது. அதற்கு அனுமதியில்லைன்னு' முடிவெடுத்தோம். அந்த எச்சரிக்கையைப் போர்டுகளாக ஊர் முழுக்க வைத்துள்ளோம்.

அதேபோல், எங்க ஊர்ல விநாயகர், முத்துசாமி, பகவதியம்மன் கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்களுக்கு பக்கத்துல கிணறுகளும் இருக்கு. அந்த கிணறுகளைச் சுற்றி ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைப்பாங்க. கிணற்றை அவை மறைப்பதால், அந்தக் கிணறுகளுக்குள் காலி பாட்டில்களை எறிவது, குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்களை வீசுவதுன்னு எல்லோரும் அசுத்தப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அந்தக் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டுதான், அருகில் இருக்கும் கோயில்களில் பூஜை பண்ணுவாங்க. கிணறுகள் அசுத்தப்பட்டதால், அவற்றின் தண்ணீர் புனிதம் கெட்டது என்று கருதி, கிணறுகளைச் சுற்றி போர்டுகள் வைக்கக்கூடாதுன்னு தடைபோட்டோம். அதற்கான அறிவிப்புப் பலகைகளையும் வைத்துள்ளோம். அதன்பிறகு இப்போ கடந்த நான்கு வருஷமா, அந்தக் கிணறுகள் தூய்மையா இருக்கு. தண்ணீரும் அள்ளிப் பருகும் அளவுக்கு தெளிவா இருக்கு" என்றார்.

அடுத்துப் பேசிய கருப்பண்ணன், "எங்க ஊருக்குள் சாதிப்பிரச்னைகள் வராமல் இருக்க இப்போது, சாதிச் சங்கங்களையோ, அவைசார்ந்த ஃப்ளெக்ஸ்களையோ ஊருக்குள் வைக்கத் தடை போட்டுள்ளோம். இன்னொரு பிரச்னையாக எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியது மணல் லாரிகள்தான். அருகில், காவிரி ஆறு ஓடுவதால், அதில் இருந்து மணல் ஏற்றிவரும் லாரிகள் எங்க ஊருக்குள் புகுந்துவர ஆரம்பித்தன. குறுகிய சாலைகள் கொண்ட பகுதி எங்க கிராமம் என்பதால், திடீர் திடீர்னு, வரிசைக்கட்டி வரும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. அதோடு, லாரிகளில் இருந்து பறக்கும் மண் மற்றும் புழுதியால் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதையடுத்து, லாரி ஓட்டுபவர்களைக் கடுமையாக எச்சரித்ததோடு, 'இந்த வழியாக மணல் லாரிகள் செல்ல அனுமதியில்லை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்னு' போர்டுகளை வைத்துள்ளோம். இப்போ மணல் லாரிகள் வர்றதில்லை. மீறிவந்த ஒன்றிரண்டு மணல் லாரிகளையும் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து சிறைப்பிடித்து, அவங்க 'இனி இப்படி வரமாட்டோம்'ன்னு எழுதி உத்தரவாதம் கொடுத்தபிறகே விடுவித்தோம். குப்பைகளைப் போட தனியாகக் குப்பைத் தொட்டிகளை வைத்துள்ளோம். இதுபோன்ற கட்டுப்பாடுகளால், ஊர்மக்கள் அனைவரும் நிம்மதியா இருக்கோம்" என்றார் சந்தோஷமாக!.

எல்லா கிராமங்களும் இதைக் கடைப்பிடித்தால், ஊருக்கும், மக்களுக்கும் நல்லது!Trending Articles

Sponsored