`யார் இந்தப் பதிவாளர் கணேசன்?’ - அண்ணா பல்கலைக்கழகத்தை ஆட்டிவைத்த பின்னணி Sponsoredசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்த கணேசன் மீது துணைவேந்தர் சூரப்பா நடவடிக்கை எடுத்துள்ளார். கணேசன் குறித்து பரபர தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுகூட்டல் விவகாரத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த ஜி.வி.உமா உட்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீஸார், மறுகூட்டல் விவகாரத்தில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். 

Sponsored


இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று துணைவேந்தரிடம் ஒரு பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டது. அதில், பதிவாளர் கணேசன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அதைத்தொடர்ந்து துணைவேந்தர் சூரப்பா, கணேசன் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். ஆசிரியர் கூட்டமைப்பு கொடுத்த புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை பல்கலைக்கழகத்தில் பலர் வரவேற்றுள்ளனர். 

Sponsored


 யார் இந்தக் கணேசன் என்று பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசியர்களிடம் விசாரித்தோம். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 ``கணேசனின் சொந்த ஊர் புதுச்சேரி. எம்.எஸ்ஸி இயற்பியல் முடித்த அவர், புதுச்சேரியில் பிஹெச்.டி படித்தார். அதன் பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். கல்வி கற்பிக்கும் பணியைவிட அலுவலக நிர்வாகப் பணிகளிலேயே அவர் ஆர்வம் செலுத்தினார். கடந்த 13 ஆண்டுகளாக அலுவலக நிர்வாகப் பணிகளிலேயே பணியாற்றினார். கடந்த  5 ஆண்டுகளாகப் பதிவாளராக இருந்தார். அந்தச் சமயத்தில் துணைவேந்தராக இருந்தவருக்கு உறுதுணையாக இருந்தார். 

 

அந்தக் காலகட்டத்தில்தான் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஜி.வி.உமாவும் இருந்தார். இவர்கள் மூன்றுபேரின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இருப்பினும் அரசியல் செல்வாக்கால் நடவடிக்கைகளிலிருந்து தப்பினர். ஆனால், முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் சில முக்கிய தகவல்கள் வெளியாகின. ஆனால், ஜி.வி. உமா, கணேசன்  இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

உமா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவர் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பதவியிலிருந்து இடமாற்றப்பட்டு மீண்டும் பேராசிரியரானார். அப்போதுதான் உமா, மறுகூட்டல் விவகாரத்தில் சிக்கினார். உமாவுக்கு உறுதுணையாக இருந்தது பதிவாளர் கணேசன், முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவாளர் கணேசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கணேசனுக்கும் வடமாவட்டத்தில் செல்வாக்காக இருக்கும் கட்சியின் தலைவரின் மருமகனுக்கும் தொடர்பு உள்ளது. அந்த நபரின் மாணவனான கணேசன், அவரின் உதவியால்தான் அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தார். அதன் பிறகு, அவருக்கு ஏறுமுகம்தான். முக்கியப் பதவிகளை வகித்த கணேசன், துணைவேந்தர் ராஜாராம் பணியாற்றியபோது பதிவாளர் பதவி கிடைத்தது. அந்தப் பதவியில் நீண்ட காலமாக இருந்த கணேசன், அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். 

ஆளுங்கட்சியினருடனும் நல்ல நட்பில் இருந்தார். இந்தச் சமயத்தில் துணைவேந்தர் பதவி காலியானது. இதனால் நிர்வாகத்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு கட்டுப்பாட்டில்தான் பல்கலைக்கழகம்  செயல்பட்டது. இதுதான் முறைகேடுகளுக்கு முதல் காரணமாக அமைந்தது. தற்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் சூரப்பா, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் போன்றவர்களால் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்களில் சினிமா பிரமுகர் போர்வையில் தொழிலபதிபர் ஒருவர் உள்ளார். அவரிடம் விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்" என்றனர். 

பதிவாளர் கணேசனை அந்தப் பதவியிலிருந்து நீக்கியதும் அந்த இடத்தில் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இயற்பியல் பேராசிரியர்தான். ஊழல் குற்றச்சாட்டுக்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்றுபவர்கள் சிக்குவது தொடர்கதையாகிவருகிறது. எனவே, ஊழல் புகார்களில் சிக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதோடு உயர் கல்வித் துறையில் ஊழல் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.  Trending Articles

Sponsored