ஆட்டை வாங்கிக்கொண்டு சிறுவர்கள் விளையாடும் டம்மி 2000 ரூபாய் தாள்களைக் கொடுத்த நபர்! - விவசாயிக்கு உதவிய இளைஞர்!Sponsoredகரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் ஆட்டை விலைக்கு வாங்கிய மர்ம நபர் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு 2000 ரூபாய் பணத்தாள்கள் இரண்டைக் கொடுத்து விவசாயியை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். கோயிலுக்குச் செல்வதற்காக ஆட்டை விற்ற அந்த விவசாயிக்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது காளிப்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவாச்சாரி. விவசாயியான இவர், ஆடுகளையும் வளர்த்து வருகிறார். 'தன் மகளுக்கு நல்லபடியாகத் திருமணம் முடிந்தால், உன் கோயிலில் கிரிவலம் வருகிறேன்' என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரிடம் வேண்டி இருக்கிறார். அவரின் மகளுக்கு நல்லபடியாகத் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆனாலும், ஏழ்மை நிலைமையில் உள்ள இவரால் உடனே திருவண்ணாமலைக்குச் செல்ல முடியவில்லை.

Sponsored


இந்நிலையில், தான் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்றை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் திருவண்ணாமலைக்குப் போக முடிவெடுத்திருக்கிறார். அதன்படி, ஆட்டை அருகில் உள்ள சந்தையில் விற்கப்போயிருக்கிறார். அங்கே வந்த மர்ம நபர், இவரின் ஆட்டை 5,000 ரூபாய்க்கு வாங்க பேரம் பேசி முடித்து, இரண்டு 2,000 பணத்தாள்களையும், பத்து 100 ரூபாய்தாள்களையும் ராகவாச்சாரியிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், வீட்டுக்கு வந்த ராகவாச்சாரியிடம் இருந்த பணத்தை சோதித்த அவரின் மகன் பாலாஜி, இரண்டு 2000 ரூபாய் தாள்களும் சிறு பிள்ளைகள் விளையாடப் பயன்படுத்தும் டம்மி தாள்கள் என்பதை கண்டறிந்தார். 'ஆட்டை வாங்கிய மர்ம நபர் ஏமாற்றியதை உணர்ந்த ராகவாச்சாரி தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார். காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் மற்றவர்களின் பரிகாசத்துக்கு ஆளாக நேரிடும் என்று எண்ணி அமைதியாக இருந்தார். 

 'கோயிலுக்குப் போக முடியலையே' என்று அவர் மனம் புழுங்கி இருக்கிறார்.

Sponsored


இந்தத் தகவல் அந்தப் பகுதி நண்பர் மூலம் 'இணைந்த கைகள்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி என்ற இளைஞர் கவனத்துக்குப் போயிருக்கிறது. ராகவாச்சாரிக்கு உதவ முடிவெடுத்த சாதிக், அவரின் வீடு தேடி போய் ஆறுதல் சொன்னதோடு, தனது சொந்த பணத்தில் 6,000 ரூபாயைக் கொடுத்து, அவர் திருவண்ணாமலை கோயிலுக்குப் போக உதவி நெகிழ வைத்திருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய ராகவாச்சாரி, "நான் படிக்காதவன். கைநாட்டு பேர்வழி. அதான், என்னை நல்லா என் ஆட்டை வாங்கியவன் ஏமாத்திப்புட்டான். எனக்குப் பணம் போச்சேங்கிற கவலையைவிட, கோயிலுக்குப் போக முடியவில்லையே என்கிற கவலைதான் அதிகம் இருந்துச்சு. அந்தத் திருவண்ணாமலையாரே சாதிக் அலி தம்பி ரூபத்துல வந்து எனக்கு உதவி பண்ணி வச்சுருக்கார். அந்தத் தம்பியை என் வாழ்நாளைக்கும் மறக்க மாட்டேன். என்னை ஏமாத்தின அந்த மர்ம நபர் நல்லா இருக்கட்டும்" என்றார்.


 Trending Articles

Sponsored