`காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு வந்தும் கடைமடைப் பகுதி காய்ந்துதான் கிடக்கிறது!’ - விவசாயிகள் வேதனை



Sponsored



மேட்டூரிலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கபட்டு 20 நாள்களுக்கு மேலாகியும் தஞ்சாவூர் கடைமடைப் பகுதிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஏற்கெனவே நீர் வரத்து அதிகமாக இருந்ததால் அவை கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு தண்ணீர் கடலில் கலந்தது. கல்லணை கால்வாய்களின் கரைகளைச் சீரமைத்து பல ஆண்டுகள் ஆகின்றன. கரைகள் பலமாக இல்லாததால்தான் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது அதனால்தான் கைக்கு எட்டிய தண்ணீர், வயலுக்கு எட்டவில்லை. எனவே,  கண்ணீர் வடிக்கும்  நிலைமையில்தான் இருக்கிறோம் என ஆதங்கப்படுகிறார்கள் கடைமடைப் பகுதி விவசாயிகள்.

Sponsored


தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகள் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திம் எனப் பல பகுதிகளை உள்ளடக்கியது. இந்தப் பகுதியின் பாசன நிலங்களுக்கு கல்லணை அணையிலிருந்து கல்லணை கால்வாய் என்ற கிளை ஆறாக கடைமடைப் பகுதிக்குத் திறந்திவிடப்படும் நீர் பாய்ந்து விவசாயிகளை மட்டும் இல்லாமல் விவசாய நிலங்களையும் செழிக்கச் செய்யும். இந்த ஆண்டு மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர், கல்லணை அணையிலிருந்து பாசனத்துக்காகத் திறந்துவிடப்பட்டு சுமார் 20 தினங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், இதுவரை கடைமடைப் பகுதிக்கு முழுமையாகத் தண்ணீர் வந்து சேரவில்லை. மேலும், முறை வைத்து தண்ணீர் விடுவதாலும் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. பல பகுதிகளுக்கு இன்னும் தண்ணீரே செல்லவில்லை.

Sponsored


இதைக் கண்டித்து விவசாய சங்கங்கள், விவசாயிகள் என அனைவரும் ஆர்ப்பாட்டம், டவரில் ஏறி போராட்டம், சாலை மறியல் எனப் பல போராட்டங்களைக் கடைமடைப் பகுதிகளில் நடத்தி வருகிறார்கள். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுவரை முறையான பதில் எதுவும் சொல்லாமல் மெத்தனமாக இருந்து மௌனம் காக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் கூறுகிறார்கள். இதுகுறித்து பட்டுக்கோட்டை விவசாயி வீரசேனனிடம் பேசினோம். ``கல்லணைக் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரால் கடைமடைப் பகுதிகளில் உள்ள பாசன நிலங்கள் மற்றும் ஏரி, குளங்கள் என அனைத்தும் பயனடையும். கடந்த பல ஆண்டுகளாகவே காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்ட விவசாய நிலங்கள் வறண்டுபோய் கிடந்தன. இதில் கடைமடைப் பகுதி விவசாயிகளுடைய விவசாய நிலங்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்தது.

ஐந்து வருடத்துக்குப் பிறகு, இப்பதான் தண்ணீர் வந்தது. நாம், விவசாயப் பணிகளைச் செய்வோம் என மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால், கல்லணை கால்வாயின் கரைகள் பலமாக இல்லாததால் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைவிட குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிட்டனர். மேலும் மேட்டூரில் நீர்வரத்து அதிகமானதைத் தொடர்ந்து திறந்துவிடப்படும் தண்னீரின் அளவை கூட்டினர். இதனால் தஞ்சாவூர் அருகே கல்விராயன்பேட்டையில் 20 அடி அகலத்துக்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. இதைத் தொடர்ந்து மீண்டும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நாங்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம், `கல்லணை கால்வாய்களின் கரைகள் பலபடுத்தப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. இதனால் கரைகள் மிகவும் பலவீனமாக இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் கரைகளைச் சீரமைக்காமல், நீங்கள் தண்ணீரின் அளவை குறைத்து திறந்து விடுகிறீர்கள். இதனால் கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை’ என முறையிட்டோம்.

அதற்கு கலெக்டர், `கல்விராயன் பேட்டையில் உடைப்பு ஏற்பட்டதற்கு உடும்பு கரைகளில் தங்குவதற்காக ஓட்டை போட்டதுதான் காரணம்’ என விளக்கம் சொல்கிறார். உடனே நாங்கள் `இந்தப் பதிலைச் சொல்வதற்கு எங்கு சார் ரூம் போட்டு யோசிச்சிட்டு வந்தீங்க’ எனக் கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை. இதனால், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு வந்தும் கடைமடைப் பகுதி காய்ந்து கிடக்கிறது. ஏற்கெனவே, நீர்வரத்து அதிகரித்தபோது அவற்றைக் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட்டு கடலில் கலக்க வைத்து வீனடித்தனர். இப்போது, மீண்டும் கடந்த சில தினங்களாக மேட்டூருக்கு நீர்வரத்து அதிகமாக வருகிறது. இதனால் மேட்டூரிலிருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இவற்றையும் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட்டு வீணடிக்கப்போகிறார்கள். பொதுப்பணிதுறையின் மெத்தனப் போக்கும், அதிகாரிகளின் அலட்சியமும் ஆறுகளின் கரைகள் சீரமைக்கப்படாததும்தான் இதற்குக் காரணம். இதனால் கண்ணுக்கு எட்டிய அளவுக்குத் தண்ணீர் வந்தும் கண்ணீர் வடிக்கும் நிலையில்தான் கடைமடை விவசாயிகள் இருக்கிறார்கள்’’ என்றார். 
 



Trending Articles

Sponsored