வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்! #WorldElephantDaySponsoredசங்க இலக்கியங்களில் மா, வேழம், கரி, சிந்தூரம், அத்தி, அருகு, ஆம்பல், அலுவல், இபம், இம்மடி, கைம்மா போன்ற 50ற்கும் அதிகமான பெயர்களில் அழைக்கப்படும் விலங்கு யானை. தமிழர்களில் வாழ்வியலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் இந்த யானைகள். சங்கத்தமிழன், தான் இயற்றிய இலக்கியத்தில் எவ்வாறெல்லாம் குறிப்பிட்டிருக்கிறான் என்று பார்க்கலாம்.

வீரமும் வெற்றியும் யானையினுடையதே :

புதர் ஒன்றில் தனது கூட்டத்துடன் மேய்ந்துகொண்டிருந்த ஆண் யானை, நீர்நிலை ஒன்றில் பதுங்கியிருந்து தன்னைத் தாக்க வந்த புலியை தனது கூரிய தந்தத்தால் குத்தி கொன்று, தந்தத்தில் வழியும் குருதியை கொட்டும் மழை நீரில் கழுவி விட்டு மலைச்சரிவில் இறங்கி தனது கூட்டத்துடன் சேர்ந்துகொண்டது என்கிறது கபிலர் எழுதிய அகநானூற்றுப் பாடல் ஒன்று. புலியைக் கொல்லும் யானையை போரில் ஒருவன் கொல்கிறான், அதுவும் ஆயிரம் யானைகளைக் கொன்று குவிக்கிறான் என்றால் அவனைப் போற்றி பாடாமல் இருக்க முடியுமா? அப்படி அமைந்தது தான் பரணி.

Sponsored


Sponsored


மாபெரும் போரில், ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனை வாழ்த்திப் பாடுவதாக அமைகிறது பரணி இலக்கியம். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்களை வீழ்த்தும் யானைப்படையானது போரின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். அதனாலேயே ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைச் சங்க இலக்கியம் போற்றிப் பாடுகிறது. இது ஒருபுறம் என்றால், இலங்கையின் வன்னியில், மதங் கொண்ட யானையை அடக்கிய ’அரியாத்தை’ என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் “வேழம்படுத்த வீராங்கனை”என்னும் நாட்டுக்கூத்தை செல்லத்துரை என்பவர் எழுதினார். இப்படி யானையை அடக்குவதும், வதம் செய்வதும் வீரத்தின் அடையாளமாகவே தமிழர்கள் கருதினர்.

அதியமானின் யானைப்படைகளைக் கண்ட எதிரி நாட்டு மன்னன், தனது கோட்டை கதவுகளுக்கு வலிமையான புதிய கணையமரங்களைப் பொருத்தினர் என்று அவ்வையார் பாடல் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது.

காதலும் யானையும் :

”வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்”

எனத் தன்னுடைய திருமணக்கனவைப் பற்றி நாச்சியார் திருமொழியில் கூறுகிறார் ஆண்டாள். அதாவது, திருமால், ஆயிரம் யானைகள் சூழ வருகிறார். அக்காட்சியைக் காணும் மக்கள், பாதையின் இரு புறமும் பொற்குடங்களை வைத்து, தோரங்கள் கட்டி வரவேற்பதாகக் கனவு கண்டதை தன் தோழியிடம் ஆண்டாள் கூறுவதாக அமைகிறது அப்பாடல்.

”நசைபெரிது உடையார் நல்கலும் நல்குவார்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின் தோழி! அவர் சென்ற ஆறே”  –  குறுந்தொகை.

பிரிந்து சென்ற காதலன் விரைவில் வருவான் எனத் தோழி, தலைவியிடம் கூறுவதாக அமைந்திருக்கும் இப்பாடலில், தலைவன் சென்ற பாலை நிலத்தில், வலிமையான ஆண் யானை, மென்மையான கிளைகளை உடைத்து பெண் யானைக்குக் கொடுக்கும் காட்சி இருக்கும். அதனைப் பார்க்கும் தலைவன், விரைவில் வந்து சேர்வான் எனக் கவலையில் இருக்கும் தலைவிக்கு தோழி கூறுகிறாள். காதலிலும் யானை இன்றியமையாததாக உள்ளது என்பதை மேற்கண்ட இரு பாடல்களின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

யானையை விட மனிதர்களிடம் தள்ளி நிற்க வேண்டும் :

”கொம்புளதற்கு ஐந்து  குதிரைக்கு பத்துமுழம்

வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி

தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி” -  நீதி வெண்பா

இப்பாடலில், கொம்பிருக்கும் விலங்குகள் இருக்கிறது என்றால் அது இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து முழம் தள்ளி நிற்க வேண்டும். குதிரையாக இருந்தால் பத்து முழம் தள்ளி நிற்க வேண்டும், அதே யானையாக இருந்தால் ஆயிரம் முழம் தள்ளி நிற்க வேண்டும். அதே போல்,  தீயோரைக் கண்டால் கண் காணாத தூரத்திற்கு ஓடிவிடுங்கள் என்று கூறுகிறது இப்பாடல். மனிதர்களையும், அவர்களின் குணங்களையும் விளக்குவதற்காக யானையை ஒப்பிட்டு இந்த பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், மிகப்பெரிய விலங்கான யானையை விட ஆபத்தானவன் மனிதன் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.

சங்க இலக்கியங்களில் வீரத்திற்கும் காதலுக்கும், ஒழுக்கத்திற்கும் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்ட யானைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எண்ணிக்கையில் மிகவும் சுருங்கிவிட்ட யானைகளில் வாழ்வியலையும் அதன் வாழிடத்தையும் காக்கும் கடமை நமக்கு உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.Trending Articles

Sponsored