`குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த சிறைக்கைதிகள்' - நெஞ்சை உருகவைத்த பாளையங்கோட்டை சிறை காட்சிகள்!



Sponsored



நன்னடத்தை சிறைக்கைதிகள் 50 பேர் இன்று தங்கள் உறவினர்களை உடனிருந்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நீண்ட காலமாக தங்களின் குழந்தைகளை அருகில் இருந்து பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்த சூழலில் இன்று அவர்களைக் கொஞ்சி மகிழும் வாய்ப்பு பெற்றதால் மகிழ்ச்சி அடைந்தனர். 

சிறைச்சாலை என்பது தண்டனைக்குரிய இடமாக மட்டும் அல்லாமல், கைதிகள் வெளியில் செல்லும்போது சமுதாயத்தில் பிறரைப் போல சமூக உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஐ.பி.எஸ் அதிகாரியான அசுதோஷ் சுக்லா சிறைத்துறை இயக்குநராகப் பொறுப்பேற்ற பின்னர் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளின் மறு வாழ்வுக்காக கூடுதல் அக்கறையுடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

Sponsored


தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் தண்டனைக் கைதிகள் பயனடைந்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனைக் கைதிகளாக இருப்பவர்களின் நன்னடத்தை அடிப்படையிலான பட்டியல் சேகரிக்கப்பட்டது. நன்னடத்தை சிறைவாசிகளுக்கான இன்றைய நேர்காணலின் போது அவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. 

Sponsored


இதுவரையிலும், தண்டனை சிறைவாசிகள் தங்களுடைய குடும்பத்தினரை கம்பிக்குப் பின்னால் இருந்து மட்டுமே சந்திக்க முடியும் என்கிற நிலைமை இருந்தது. அதனால், குழந்தைகளைக் கூட கொஞ்ச முடியாமல் ஏக்கத்துடன் பார்க்க மட்டுமே முடிந்தது. ஆனால், நன்னடத்தை தண்டனை சிறைவாசிகளை இன்று குடும்பத்தினருடன் அமர்ந்து நேர்காணலில் பங்கேற்க வசதி செய்யப்பட்டிருந்தது.

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் 200 நன்னடத்தை சிறைவாசிகள் இருக்கிறார்கள். அவர்களில் 50 பேரின் உறவினர்கள் மட்டுமே இன்று பார்வையாளர் நேரத்தில் வந்திருந்தனர். அவர்களை சிறைவாசிகள் தனியாக அமர்ந்து சந்திக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. பல சிறைவாசிகள், தங்களின் குழந்தைகளை நீண்ட காலமாக கொஞ்சக்கூட முடியாத சோகத்தில் இருந்தநிலையில், இன்று அவர்கள் உற்சாகத்துடன் குழந்தைகளை மடியில் அமரவைத்து கொஞ்சி மகிழ்ந்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. 

குழந்தைகளும் தங்களின் தந்தை மற்றும் உறவினரின் அருகாமையில் அமர்ந்து அவர்களின் நெருக்கமான அன்பை பகிர்ந்து கொண்டு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இத்தகைய மகிழ்ச்சியான வாய்ப்பை வழங்கிய தமிழக சிறைத்துறை அதிகாரிகளுக்கு சிறைவாசிகளும் அவர்களின் குடும்பத்தினரும் நன்றியை தெரியப்படுத்தினார்கள். 



Trending Articles

Sponsored