ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. பராமரிப்பு... மின்சாரச் செலவைக் குறைக்கும் வழிகள்!



Sponsored



ன்று பெரும்பாலான மக்களுக்கு மின்சாரத்தைத் தொட்டால் அடிக்கும் ஷாக்கிற்கு பதிலாக மின்சாரக் கட்டணத்தைப் பார்த்தால் அடிக்கும் ஷாக்தான் அதிகம். மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க சில வழிகள் இருக்கின்றன. அதனை முறையாகப் பின்பற்றினால் மின்சாரப் பயன்பாடு குறைந்து, மின் கட்டணம் வெகுவாகக் குறையும்.

இன்றைக்கு ஏ.சி-கள் பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துவிட்டன. பொதுவாக வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ஏ.சியைக் குறைவாக வைப்பது நம் வழக்கம். இதனால் அனலாகக் காட்சியளிக்கும் அறை, அன்டார்டிகா பனிக்கட்டிபோல மாறிவிடும். இதற்காக ஏ.சி நீண்ட நேரம் இயங்க வேண்டியிருக்கிறது. இது தொடர்ந்துகொண்டே போனால் மாத முடிவில் மின் கட்டணம் பெரும் சுமையாக வந்து நிற்கும். அதனால் ஏ.சி வெப்பநிலை அளவை 23 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வைக்கலாம். இதனால் அறை போதுமான குளிர் வெப்ப நிலையை அடைவதோடு மின்சாரக் கட்டணம் குறையும். 

Sponsored


சில வீடுகளில் இன்றும் குண்டு பல்புகள் என்ற மஞ்சள் நிறம் கொண்ட பல்புகளைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். குண்டு பல்புகள் 10  ரூபாய்தான் விலை என்றாலும், பத்து மடங்கு மின்சாரத்தை விழுங்கக் கூடியது. எனவே குண்டு பல்புகளுக்கு விடை கொடுத்துவிட்டு, விலை சற்று அதிகமாக இருந்தாலும், எல்.இ.டி பல்புகளை வாங்கிப் பொருத்துவது நல்லது. இதனால் மின்சாரக் கட்டணம் பெருமளவில் மிச்சமாகும். அதேபோல எந்த அறையில் எத்தனை வாட் பல்புகளை பொருத்துவது என்று பலருக்கும் தெரிவதில்லை. கழிவறை மற்றும் குளியலறைகளில் அதிக வாட் கொண்ட பல்புகளை பொருத்தியிருப்பார்கள். இந்த அறைகளைப் பயன்படுத்திவிட்டு பல்புகளை அணைக்காமல் வந்துவிட்டால் தேவையற்ற மின்சார இழப்பு ஏற்படும். எனவே, அதிக வெளிச்சம் தேவைப்படாத இடங்களில் குறைவான வாட் பல்புகளை பயன்படுத்துவது நல்லது. இதனால் மின் இழப்பு குறையும்; மின் கட்டணம் மிச்சமாகும். 

Sponsored


டி.வி, டி.வி.டி பிளேயர், மியூசிக் சிஸ்டம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்திய பின்னர், அதை ஸ்டேண்ட்பை மோடில் விட்டுவிடுவது அதிகமானோரின் வழக்கம். அந்த நேரத்தில் எலக்ட்ரானிக் சாதனங்கள் மின்சாரத்தை விழுங்கிக்கொண்டுதானிருக்கும். அதேபோல பெரிய அளவிலான சாதனங்கள் முதல், செல்போன் சார்ஜர் வரை உபயோகம் இல்லாமல் இருந்தால், சுவிட்சை அணைத்துவிடுவது நல்லது. வீட்டில் இருக்கும் சி.ஆர்.டி திரையை எல்.இ.டியாக மாற்றிக்கொள்ளலாம். அதேபோல வீட்டில் இருக்கும் மோட்டார்களில் ஆயில், பெல்ட் போன்ற பாகங்களை சரிவர பராமரித்துக்கொள்வதும் நல்லது. கடினமாக இயங்கும் மின்மோட்டார் அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். 

ஒரு வீட்டின் மாதாந்திர மின்சாரக் கட்டணத்தில் கணிசமான அளவு எடுத்துக்கொள்வது ஃபிரிட்ஜ். இதற்கு ஃபிரிட்ஜின் குளிர்விக்கும் திறனைக் குறைவாக வைத்திருங்கள். அதன் கதவுகளில் உள்ள ரப்பரைச் சரிவர பார்த்துக்கொள்வதும் நல்லது. அதனால் ஃப்ரிட்ஜிற்குள் இருக்கும் குளிர்காற்று வெளிவராமல் தடுக்கலாம். இதனாலும் மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம். மைக்ரோவேவ் அவன் போன்ற எலக்ட்ரிக் ஸ்டவ்வில் சமைப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னர் அடுப்பை அனைத்துவிடலாம். மைக்ரோவேவ் அவனில் சூடேற்றப்போகும் பொருள்களை ஃப்ரிட்ஜிலிருந்து பத்து நிமிடங்களுக்கு முன்னர் எடுத்து வெளியில் வைத்துவிடலாம். இதனால் உணவுப் பொருள்களை அறையின் வெப்பநிலைக்கு மாறி அதன் பின்னர் சூடேறி, பயன்படுத்தும் மின்சாரம் குறையும். 

வீட்டில் இயக்கும் வாஷிங் மெஷினை ஆப்லோடு, ஓவர் லோடு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் வைத்து இயக்கலாம். துணிகளைத் துவைத்த பின்னர் வாஷிங் மெஷின் ஸ்டேண்ட்பை மோடில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கூடுதலாகச் செலவாகும் மின்சாரத்தின் அளவைக் குறைக்கலாம். வீட்டில் தேவையற்ற நேரங்களில் மின் விளக்குகளையும், மின்விசிறிகளையும் இயக்குவதைத் தவிர்க்கலாம்.

மின்சாரத்தைக் குறைக்க பல வழிகள் இருக்கின்றன. அதைச் சரியாகப் பின்பற்றி மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கலாம். மின்சாரத்தைச் சேமிக்கலாம்.



Trending Articles

Sponsored