`அவர் இல்லாதது என் வாழ்க்கையில் இருண்ட நாள்'- கருணாநிதிக்காகக் கண்ணீர் சிந்தும் துரைமுருகன்Sponsored"தலைவர் கலைஞர் இல்லாத நாள்கள், என் வாழ்க்கையில் இருண்ட நாள்கள். நான், தனிமையில் பைத்தியக்காரன் போல் உணர்கிறேன்" என தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கண்ணீர் மல்க கூறினார்.

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில், வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. வேலூர் கிரீன் சர்க்கிளில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை நடைபெற்ற இப்பேரணியில், தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி மற்றும் ஒன்றியச் செயலாளர் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, வேலூர் மாநகர அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர்தூவி 10 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டுப் பேரணியாக வந்தனர்.

Sponsored


Sponsored


அதன் பின்பு பேசிய துரைமுருகன், கருணாநிதியுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு கண்ணீர் விட்டார். "எத்தனையோ முறை வேலூரில் கலைஞருக்கு ராஜ வரவேற்பு அளித்துள்ளோம். ஆனால், இதுபோன்று மௌன ஊர்வலம் நடத்துவோம் என நினைக்கவில்லை. அவருக்கு முன் நான் போய்விடுவேன் என்றுதான் நான் நினைத்தேன். அவர் ஆலமரம். அவர் விட்டுச்சென்ற விழுதுதான் ஸ்டாலின். அவரைத்தான் நம்பி இருக்கிறோம். அவர்தான் தி.மு.க-வை காப்பாற்ற வேண்டும்.

கலைஞர் இல்லாதது, என் வாழ்க்கையே இருண்டு போனதாகக் கருதுகிறேன். தனிமையில் இருக்கும்போது நான் பைத்தியக்காரன் போல உணர்கிறேன். எத்தனையோ பேருக்கு 'பாரத ரத்னா' விருது வாங்கிக் கொடுத்தவர் கலைஞர். அதேபோன்று கலைஞருக்கும் 'பாரத ரத்னா' வழங்க வேண்டும். நாங்கள் கேட்பதைவிட, தோழமைக் கட்சியினர் கேட்கிறார்கள். மத்திய அரசு மனதுவைத்து கலைஞருக்குத் தரவேண்டும். கலைஞரிடம் இருந்து நான் பாசத்தை, அன்பை, அரவணைப்பை, இழந்துவிட்டேன். கலைஞர் மறைந்த நாள்களிலிருந்து நான் சூனியத்தில் அமர்ந்துள்ளேன். காலம்தான் என்னைத் தேற்ற வேண்டும். கலைஞரின் உடல் மறைந்திருக்கலாம், ஆனால் அவர் ஊட்டிய உணர்வு, காட்டிய வழி, சொல்லிக்கொடுத்த சுயமரியாதைக் கருத்துகள்,  தமிழுக்குத் தொண்டுசெய்ய வேண்டும் என அவர் சொன்ன கருத்துகள் எல்லாம் அப்படியேதான் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, கழகத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. இதை கழகத் தோழர்கள் செய்வதுதான் கலைஞருக்கு காட்டுகின்ற மரியாதை" என்று கண்ணீர் விட்டு அழுதார்.Trending Articles

Sponsored