கேரளாவுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பிய ரஜினி ரசிகர்கள்!Sponsoredகடவுளின் தேசமான கேரளாவை வரலாறு காணாத மழை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். மீட்புப் பணிக்குரிய 100 ஹெல்மெட், கையுறைகள் உள்ளிட்ட பொருள்களை கேரளாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள், ரஜினிகாந்த்தின் ஆர்.பி.எஸ்.ஐ (RBSI)  என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் நடத்திவரும் ரசிகர்கள்.

இந்த ஆர்.பி.எஸ்.ஐ ஃபேஸ்புக் பக்கத்தில், 4 லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். ஏற்கெனவே, 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பின்போது, இவர்களின் சேவையை ரஜினி பாராட்டியதோடு தனுஷ், சௌந்தர்யா மூலம் இவர்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பி, மக்களுக்குக் கொடுக்கவைத்தார். அதைத் தொடர்ந்து, டிஜிட்டல் டெம்போ வேனில் போய், சமீபத்தில் ரஜினி மக்கள் இயக்கத்துக்கு கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உறுப்பினர்கள் சேர்த்தார்கள். இப்போது, கேரளாவுக்கு மீட்புப் பணியில் இருப்பவர்களுக்கு உதவும் அல்ட்ரா பாதுகாப்பு ஹெல்மெட்டுகள், தண்ணீரிலும் தூசியிலும் தெளிவாகத் தெரியும் கண்ணாடி, கையுறைகள் அடங்கிய நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்து அசத்தியிருக்கிறார்கள்.

இதுபற்றி, ஆர்.பி.எஸ்.ஐ ரஜினி ஃபேஸ்புக் பக்க ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்கிடம் பேசினோம்.

"நாங்க தலைவர் ஃபேன் என்ற வகையில் மட்டுமே இதை அனுப்பியிருக்கிறோம். வேறு எந்த அரசியல் காரணங்களும் இல்லை. சென்னையில் வெள்ளம் வந்தப்ப, கேரள மக்கள் நமக்கு பெரிதும் உதவினாங்க. பதிலுக்கு நாம உதவ வேண்டாமா? கேரள முதலமைச்சரின் தனி செயலாளரிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு, நாங்க உதவ இருப்பதைச் சொன்னோம்; அவரும் ரெஸ்பான்ஸ் பண்ணி, நிவாரணப் பொருள்களை அனுப்பச் சொன்னார். நூறு செட் ஹெல்மெட், கையுறைகள் உள்ளிட்ட பொருள்களை அனுப்பியுள்ளோம். இப்போது மீட்புப் பணிகள் நடப்பதால், இவைகளை முதல்கட்டமாக அனுப்பியுள்ளோம். அடுத்து, மருத்துவப் பொருள்கள், உணவுப்பொருள்களை இரண்டாம்கட்டமாக அனுப்ப இருக்கிறோம். கேரளாவுக்கு வந்து குவியும் நிவாரணப் பொருள்களில், எங்களுடையது மீட்புப்பணிகளுக்கான பொருள்கள் என்பதை இனம்காணவைக்கவே, அந்தப் பொருள்கள் அடங்கிய பெட்டிகளில் தலைவர் படங்களை அச்சடித்தோம்" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored