`மண்வளத்தைப் பொறுத்தே விவசாயிகளுக்கு உரம் விற்பனை'- கலெக்டரின் அசத்தல் முயற்சி!Sponsored"மண் பரிசோதனைப்படி உரமிட்டு மண்வளம் காப்போம். உற்பத்தியைப்  பெருக்குவோம்" என்று கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `` 'மண்வளத்தைக் காத்து உணவு தானிய உற்பத்தியைத் தொடர்ந்து பெருகச் செய்ய வேண்டும்' என்ற உயரிய நோக்கத்துடன், தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கும் மண் பரிசோதனைசெய்து, மண்வள அட்டைகளை வழங்கிவருகிறது. மண்வளத்தைப் பாதுகாத்து, உணவு தானிய உற்பத்தி மற்றும் வருமானத்தைப் பெருக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதில் நீர்வளம், மண்வளம், மண்ணின் தன்மை ஆகியன முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற்றிட தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளிட்ட 20 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. மேற்கூறிய சத்துக்கள் சரியான அளவில் இருந்தால் மட்டுமே, நல்ல மகசூல் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒரு பயிருக்கான உரத் தேவையைக் கணக்கிடுவதற்கு, மண்ணில் உள்ள சத்துகளின் அளவு விவரம் அறிந்திட மண் பரிசோதனைசெய்வது மிக மிக அவசியம். மண் பரிசோதனைமூலம் நிலத்தில் உள்ள சத்துகளின் அளவை அறிந்து உரமிட, மண்வள அட்டை திட்டம்மூலம் தற்போது விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
 

மண்வள அட்டை திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியோடு 2015 -ம் ஆண்டு இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டு, இரண்டாண்டு சுழற்சி முறையில் (2015-16/ 2016-17 முதல் சுழற்சி மற்றும் 2017-18/ 2018-19 இரண்டாம் சுழற்சி) விவசாய வயல்களில் கிரிட் முறையில் மண் மாதிரிகள் சேகரித்து, மண் ஆய்வுசெய்து மண்வள அட்டை வழங்கப்பட்டுவருகிறது. கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ், முதல் சுழற்சியில் மொத்தம் 1.46 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் சுழற்சியில், இதுவரை ரூ.78,812 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2018-19-ம் ஆண்டு நிறைவில், மொத்தம் 1.46 லட்சம் விவசாயிகளுக்கு இரண்டாம் சுழற்சியில் மண்வள அட்டை
வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மண்வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள உர சிபாரிசின்படி பயிருக்குத் தேவையான உரம் இடுவதால், உரச்செலவு குறைவதோடு மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது.

சமச்சீரான உரம் இடுவதன்மூலம், மகசூல் கணிசமாக அதிகரிக்கிறது. இதனால், விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும். எனவே, வரும் காலங்களில் மண்வள அட்டையின் சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே, விவசாயிகள் விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை முனைய கருவி (POS) மூலம் பெற்றிட திட்டமிடப்பட்டுவருகிறது. எனவே, ஒவ்வொரு விவசாயியும் தங்களுடைய ஆதார் அட்டை, குடும்ப அட்டை வைத்திருப்பதுபோல, மண்வள அட்டையையும் பாதுகாப்பாக வைத்திருத்தல் மிகவும் அவசியமானதாகும். மண்வள அட்டை உபயோகத்தை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மத்தியிலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில், நடப்பு ஆண்டில் 3 வட்டாரங்களில் உள்ள 3 கிராமங்களில், மண்வள அட்டையின் சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகள் உரங்களை விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை முனைய கருவி (POS-Point Of Sale) மூலம் பெற்றுக்கொள்ளும் திட்டம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வேளாண் பெருமக்கள் மண்வள அட்டையைப் பெற்று, அதன் பயன்பாட்டை அறிந்து மண்வள அட்டையின் அடிப்படையிலேயே உரமிட்டு, மண்வளம் காத்து, அதிக மகசூல் பெறலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored