`அழகிரியால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளட்டும்!'  - ஸ்டாலின் தீர்க்கம்  Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதி சமாதியில் அழகிரி வெளிப்படுத்திய ஆதங்கம், இன்னொரு தர்மயுத்தத்துக்கு வழிவகுத்திருக்கிறது. ' கருணாநிதியால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர் அழகிரி. அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டால், என்னுடைய தலைமைதான் கேள்விக்குள்ளாகும்' என்கிறாராம் செயல் தலைவர் ஸ்டாலின். 

சென்னையில் நாளை தி.மு.கவின் அவசர செயற்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. கட்சியின் தலைவர் இறந்துவிட்டதால், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாகவே இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க மாநிலம் முழுக்க இருந்து செயற்குழு உறுப்பினர்கள் வருகை தர இருக்கின்றனர். இதன்பிறகு கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்து வரும் 1-ம் தேதிக்குள் அறிவிக்க இருக்கிறார் ஸ்டாலின். செயற்குழு தொடர்பான பணிகளில் அறிவாலய வட்டாரம் ஈடுபட்டு வரும் வேளையில், மெரினா சமாதிக்கு இன்று காலை வந்தார் அழகிரி. கருணாநிதி சமாதிக்கு மாலை போட்டுவிட்டு செய்தியாளர்களை சந்தித்தவர், 'கலைஞரின் விசுவாசமிக்க உடன்பிறப்புகள் என்னுடன்தான் இருக்கின்றனர். என்னுடைய ஆதங்கத்தைத் தெரிவிக்கவே வந்தேன்' என இரண்டே வரிகளில் பேட்டியை முடித்துவிட்டு கோபமான முகத்துடன் வெளியேறிவிட்டார். 

'பொதுக்குழுவில் அழகிரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்' என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில், ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி போர்க்கொடி உயர்த்தியிருப்பது குறித்து அறிவாலய நிர்வாகிகளிடம் பேசினோம். " காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நேரத்திலேயே, அழகிரியை உள்ளே கொண்டு வருவது குறித்து செல்வி உள்ளிட்டவர்கள் பேசி வந்தனர். அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தையே பலரும் முன்வைத்தனர். கருணாநிதி மறைவுக்குப் பிறகு, 'கட்சியின் முக்கியமான மூன்று நாற்காலிகளான தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்றில் ஒன்றை எனக்கு ஒதுக்க வேண்டும்' என்ற கோரிக்கையை அழகிரி முன்வைத்தார். செல்வியும் அழகிரிக்கு ஆதரவாக இருந்தார். இதற்குப் பிரதான காரணம், ' ஸ்டாலினுக்குப் பிறகு கனிமொழி முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது' என்பதுதான். ஆனால், அழகிரியை உள்ளே சேர்ப்பதில் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் முட்டுக்கட்டையாக இருப்பதை அறிந்து கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவரது லிஸ்ட்டில் இருக்கும் முக்கியமானவர்கள், எ.வ.வேலு, பொன்முடி, நேரு, ராசா, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்டோர். இவர்கள்தான் தன்னுடைய வருகைக்குத் தடையாக இருக்கிறார்கள் என்பது அழகிரியின் எண்ணம். மருத்துவமனையிலும் அழகிரியைப் பார்த்துதான், இந்த நிர்வாகிகள் ஒதுங்கிச் சென்றார்கள். 

Sponsored


Sponsored


இந்தச் சண்டைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோது, கனிமொழி தரப்பினரும் தங்கள் தரப்பின் பலத்தை எடுத்துச் சொல்லும் வேலையில் இறங்கினர். ' ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார் கனிமொழி. அவரால் தென்மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை வாங்க முடியும். மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் நலன் என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். அவருக்குப் பொருளாளர் பதவியைக் கொடுத்தால் மிகுந்த விசுவாசமாகச் செயல்படுவார்' என்றெல்லாம் பேசத் தொடங்கினர். 'அழகிரிக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். தென்மாவட்டத்துக்கு யாராவது ஒருவர் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால், 1977 தேர்தலில் கிடைத்த படுதோல்வியை சந்திக்க நேரிடும். அழகிரியைச் சேர்த்தால், கட்சி நிர்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவார். அதிகாரத்தில் அவர் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிடும். அழகிரியை ஒரேயடியாக ஓரம்கட்டிவிட்டால், கட்சியை எப்படியாவது நிலைநாட்டிவிடலாம்' எனவும் கட்சியின் சீனியர்கள் பேசத் தொடங்கினர். 

இதையெல்லாம் கவனித்த செயல் தலைவர் ஸ்டாலின், 'அவர்(அழகிரி) ஒரு போட்டியாளர் அல்ல. என்னுடைய குடும்பம்தான் என நான் எப்போதும் நினைக்கவில்லை. கலைஞரால் நீக்கப்பட்டவர் அழகிரி. அவரை மீண்டும் சேர்ப்பதால் என்னுடைய தலைமைதான் கேள்விக்குறியாகும். அவரைச் சேர்ப்பதால் எந்தவித பயனும் இல்லை. வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதா..அல்லது இந்தப் பஞ்சாயத்தைப் பார்ப்பதா.. அழகிரி ஒன்றும் தவிர்க்க முடியாத சக்தி அல்ல. அவரால் செய்ய முடிந்ததைப் பார்த்துக் கொள்ளட்டும். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்ற ரீதியில் தன் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதாவது, 'தன்னுடைய தலைமையை நிரூபிக்கும் வகையில் ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டு, அழகிரி விவகாரத்தைப் பார்த்துக் கொள்ளலாம்' என்பதுதான் அவருடைய மனநிலையாக இருக்கிறது. அதனால்தான், கருணாநிதி இறப்புக்குப் பிறகு ஓரிரு நாள்கள் மௌனமாக இருந்தவர், கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய முடிவைத் தெளிவாகக் கூறிவிட்டார். இதனை அழகிரி தரப்பினர் எதிர்பார்க்கவில்லை" என்றார் விரிவாக. 

சென்னை ரெஸிடென்சி ஓட்டலில் தங்கியிருக்கும் அழகிரி, நேற்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் இதுபற்றிப் பேசியவர், 'கட்சிக்குள் என்னை சேர்க்காதது குறித்த ஆதங்கத்தைத் தலைவரிடமே சொல்லிவிட்டு வருகிறேன்' எனக் கோபமான குரலில் பேசியிருக்கிறார். "நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணன் வேலையைக் காட்டுவார். செயல் தலைவர் செயல்படாத தலைவர் என அவர் பேசிவந்தார். அதனை நிரூபிக்கும் வகையில் இந்தத் தேர்தலை அவர் பயன்படுத்திக் கொள்வார். குடும்பத்தினர் அவ்வளவு கூறியும், அண்ணனுக்கு எதிராக ஒரு குரூப் வேலை பார்த்து வருகிறது. அவர்களையும் நேரம் வரும்போது அவர் கவனித்துக் கொள்வார்" என்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள். Trending Articles

Sponsored