காவிரி ஆற்றில் வெள்ளம்..! தஞ்சாவூரில் தண்டோரா மூலம் எச்சரிக்கைவிடுத்த மாவட்ட நிர்வாகம்கர்நாடகாவில் தொடர் மழை பெய்ததைத் தொடர்ந்து இந்த வருடம் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் கல்லணைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 1.25 லட்ச கன அடியாக உயர்த்தபட்டது. மேலும், நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி தண்டோரா போட்டு அறிவிப்பு செய்து வருகின்றனர்.

Sponsored


Sponsored


திருவையாறு அருகே உள்ள புனல்வாசல் கிராமம் கொள்ளிடம் கரையோரம் உள்ளது. அங்கு பெரியவர் ஒருவர் தண்டோரா அடித்துக் கொண்டே செல்ல அந்த இடத்தில் கூட்டம் கூடுகிறது. உடனே பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள், ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் ஓடுவதால் பாதுகாப்பாக இருப்பது குறித்த துண்டுப் பிரசுரம் கொடுத்து விழிப்பு உணர்வு செய்தார்கள். மேலும், ஆட்சியர் அண்ணாத்துரை அறிவிறுத்தலின்படி பொதுமக்கள் யாரும் ஆறுகளில் இறங்கி குளிக்கவும், கால்நடைகளை இறக்கிக் குளிப்பாட்டவும், சிறுவர்களை ஆற்றில் இறங்கி விளையாட அனுமதிக்கவும் வேண்டாம். மேலும், மக்கள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அல்லது ஏற்படுவதுபோல் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என எடுத்துக் கூறினர்.

Sponsored


இதுகுறித்து புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், இந்தத் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கப் போகிறது என்பதை நினைத்தால்தான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது' என்றார்.Trending Articles

Sponsored