களைகட்டியது பிரசித்திபெற்ற குருநாதசுவாமி கோயில் கால்நடை திருவிழா!Sponsoredதமிழகத்தில் அமைந்துள்ள திருத்தலங்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. அவற்றுள் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் திருவிழாக்கள் என்றால் அதற்கு தனிச்சிறப்பு உண்டு. அப்படிப் பிரசித்திபெற்ற திருத்தலங்களுள் ஒன்றுதான் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் குருநாதசுவாமி கோயில். இங்கே ஆண்டுதோறும் ஆடிமாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். இத்திருவிழாவுக்கு தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவாா்கள். இதில் கால்நடைகளுக்கான கண்காட்சி மற்றும் சந்தை பிரமாண்டமாக நடைபெறும். அதுவே இத்திருவிழாவுக்குத் தனிச்சிறப்பாகும்.

கடந்த புதன்கிழமை அன்று தொடங்கிய இத்திருவிழாவுக்குப் பல்வேறு ரகமான கால்நடைகள் விற்பனைக்காக வந்திருந்தன. எலி, பூனைகளில் தொடங்கி குதிரைகள் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் பார்த்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மாட்டு சந்தைகளில் வெளி மாநில எருமைகளான ஜாஃப்ராபாடி, கிர் [குஜராத்] முதல் காங்கேயம் காளை வரை கம்பீரமாகக் காட்சியளித்தன. பத்தாயிரத்தில் தொடங்கி பல லட்சம் வரை கால்நடைகள் விற்பனைக்காக இருந்தன. சற்று உள்ளே நகர்ந்து சென்றால், அங்கே செல்லப்பிராணிகளின் உலகம். அங்கே வளர்ப்புப் பிராணிகள் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்ட உடன் உள்ளத்தில் ஏற்பட்ட ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

Sponsored


"நாங்கள் நாய்களை வெறும் வளர்ப்புப் பிராணிகளாக என்றும் பார்த்ததில்லை, உடன் பிறந்தவர்களாக எண்ணித்தான் வளர்த்து வருகிறோம். எங்களிடம் இருக்கும் கால்நடைகள் அனைத்தும் விற்பனைக்காக இருந்தாலும், அனைவருக்கும் நாங்கள் செல்லமாகப் பெயர் வைத்துதான் அழைத்து வருகிறோம்" என்று கூறுகிறார் பைரவா  நாய்கள் பராமரிப்புப் பண்ணையின் உரிமையாளர் குரு.

Sponsored


இத்திருவிழாக்கென்றே பேர்போனது குதிரைச் சந்தை. இங்கே குதிரைகளை வாங்குவதற்கு மகாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களிலிருந்து பண்ணையாளர்கள் வருவார்கள். காத்தியவாாி, மாா்வாாி, போனி உள்ளிட்ட பல்வேறு ரகமான குதிரைகள் இருந்தன. ரேக்ளா குதிரைகள் ஓடும் வேகத்தைப் பொறுத்து அவற்றின் விலை தீர்மானம் செய்யப்படுகிறது.

``நல்ல குதிரை எங்கு இருக்கிறதோ அதைத் தேடிச் சென்று உடனே வாங்கிவிடுவோம். இத்தொழிலில் வருமானம் காண்பது கடினம்தான், நாங்கள் இதை எங்களுடைய சந்தோஷத்துக்காகவே இன்றும் செய்து வருகிறோம்’’ என்கிறார் 30 வருடங்களாகச்  சந்தையில் குதிரை விற்கும் ஆப்பக்குடலைச் சேர்ந்த மோகன்.

இத்திருவிழாவுக்காக அந்தியூரிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவிழாவின்போது வனத்தில் குடியிருக்கும் குருநாதசுவாமியைக் காண வந்த மக்கள் கூட்டமானது கடல் அலைகளைப்போன்று காட்சியளித்தது.Trending Articles

Sponsored