`நம்மை நம்பி குடும்பம் இருக்குன்னு நினைச்சாலே விபத்துகள் குறையும்!’ - `அகம்’ அக்கறை`` `நமக்குக் குடும்பம் இருக்கு; பிள்ளைகள் இருக்கு. நாம இல்லைன்னா குடும்பமே நிலைகுலைஞ்சுபோயிடும். சோத்துக்கே அல்லாடும்'னு ஒரு கணம் எல்லோரும் யோசிச்சாலே போதும். கார் ஓட்டுறவங்க சீட் பெல்ட் போடுவாங்க; பைக்ல போறவங்க ஹெல்மெட் மாட்டிக்குவாங்க. தற்கொலை பண்ணிக்க முடிவுபண்றவங்க, அந்த எண்ணத்தையே மாத்திக்குவாங்க. விபத்து, தற்கொலை மூலமா அவங்க சில நிமிஷத்துலேயே மரணத்தைத் தழுவிடலாம். ஆனா, அவங்க குடும்பம் காலகாலத்துக்கும் ஆதரவின்றி கொஞ்சம்கொஞ்சமா செத்துக்கிட்டு இருக்கும். இப்படி `குடும்பங்களை நிர்கதியா விட்டுட்டு செல்லக் கூடாது'னு வாகன ஓட்டிகளையும், தற்கொலை பண்ணிக்கிற எண்ணம்கொண்டவங்களையும் ஒரு கணம் அல்லது ஒவ்வொரு கணமும் யோசிக்கவைக்கவே நாங்க இந்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சியை நடத்திக்கிட்டிருக்கோம். கரூர்ல நடக்கிற இந்த நிகழ்ச்சி, எங்களோட 5,250-வது விழிப்புஉணர்வு நிகழ்ச்சி" என்றார் `அகம்' என்ற கூத்துப்பட்டறையை சென்னையில் நடத்திவரும் முத்துசாமி.

Sponsored


கரூர் பேருந்துநிலையம் அருகே சமீபத்தில் ஒருநாள், பகல் 11 மணி இருக்கும். 35 வயதுடைய வாலிபர் ஒருவர், கிழிந்த உடைகள், பரட்டைத்தலை, அழுக்கு உடல், கழுத்தில் மாட்டப்பட்ட செல்போன் கவர்கள் சகிதமாக வாகன ஓட்டிகளை மிரளவைத்துக்கொண்டிருந்தார். காரில் சீட் பெல்ட் மாட்டியவர்களுக்கும், பைக்கில் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கும் சல்யூட் அடித்தார். இரண்டும் செய்யாதவர்களை, `சீட் பெல்ட் போடு', `ஹெல்மெட் போடு' என்று அறிவுறுத்தினார். அவரது பேச்சையும் செய்கைகளையும் பார்த்து மிரண்ட வாகன ஓட்டிகள், `அய்யய்யோ பைத்தியம்..!' என்றபடி பதறிப்போனார்கள். இன்னும் சிலர், கொஞ்ச தூரம் தள்ளி நின்றுகொண்டிருந்த காவலர்களிடம், ``சார்... அந்தப் பைத்தியம், வாகனங்களுக்குக் குறுக்கே வர்றான். அவனைத் தடுக்கக் கூடாதா?'' என்று புகார் செய்தனர். பார்த்த மாத்திரத்தில் நமக்கும் அப்படித்தான் தோன்றியது.

Sponsored


Sponsored


ஆனால், கரூர் நகரப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து, ``போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடக்குது. அவர் பைத்தியம் அல்ல. `சிங்கம்-2', `சாமி-2' போன்ற படங்கள்ல நடித்த நடிகர் குணா. கையோடு போய் கடையில் ஹெல்மெட் வாங்கி மாட்டிக்கிட்டுப் போங்க. அதுக்காகத்தான் இந்த நிகழ்ச்சி'' என்று அறிவுறுத்த, ``ஓ... அப்படியா சங்கதி!'' என்றபடி நகர்ந்தனர் வாகன ஓட்டிகள்.

அதன் பிறகு, `மது அருந்திவிட்டு வண்டி ஓட்டினால் எப்படிக் கோரமான விபத்து நடக்கும்' என்பதை, ஒருவர் அடிபட்டுக் கிடப்பதுபோலவும், பள்ளிப்படிப்பு படிக்கும் அவரின் குழந்தைகள் எப்படி வேதனைப்படுவார்கள் என்பதையும் தத்ரூபமாக நடித்துக்காட்டினர். இன்னொரு பக்கம் மைக் மூலம் `அகம்' கூத்துப்பட்டறை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கிருஷ்ணா, ஹெல்மெட் அணியாமலோ, சரக்கடித்துவிட்டோ வண்டியில் போனால், என்னென்ன அவலங்கள் நிகழும் என்பதை விளக்கிக்கொண்டிருந்தார்.

இந்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சியைத் தலைமையேற்று நடத்தும் முத்துசாமி என்பவரிடம் பேசினோம். ``சார், நாங்களெல்லாம் சென்னையில் இயங்கிவரும் `அகம்' கூத்துப்பட்டறையைச் சேர்ந்தவங்க. சென்னையில் பத்து வருஷமா இந்தக் கூத்துப்பட்டறையை நடத்திக்கிட்டு வர்றேன். சொந்த ஊர் மதுரை. `வெயில்' பட இயக்குநர் வசந்தபாலன் எனக்கு நண்பர். அவரது `வெயில்', `அங்காடித்தெரு' போன்ற படங்கள்ல நடிச்சிருக்கேன். `அங்காடித்தெரு' ஹீரோவுக்கு எங்க கூத்துப்பட்டறையிலதான் சென்டிமென்ட் நடிப்புப் பயிற்சி கொடுத்தோம்.

சமூகசேவை பண்றதுல, எனக்கு இயல்பாவே ஆர்வம் அதிகம். ஏழு வருஷத்துக்கு முன்னாடி என் மாமனார், விபத்துல இறந்துட்டார். அந்தச் சம்பவம் என்னை ரொம்பவே பாதிச்சிருச்சு. அதனால, டூவீலர் ஓட்டுபவர்கள் ஹெல்மெட்டும், கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட்டும், மது அருந்தாம வாகனங்களை ஓட்டணும்னு சொல்லி விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடத்த ஆரம்பிச்சோம்.

அதோடு, தற்கொலை பண்ணிக்கொள்வதைத் தடுக்க, பள்ளி-கல்லூரிகள்ல நடக்கும் ஈவ்டீஸிங் சம்பவங்களைத் தடுக்க, ஆண்-பெண்களுக்கிடையேயான தொடு உணர்வு, புரிதல் தன்மைனு எங்க `அகம்' கூத்துப்பட்டறை சார்பில் நாடகங்கள், பாடல்கள், இப்போ இங்க குணா பண்ணதுபோல லைவ் நிகழ்ச்சிகள் மூலமா விழிப்புஉணர்வு ஏற்படுத்தத் தொடங்கினோம். நல்ல ரெஸ்பான்ஸ்.

தனியார் பள்ளி-கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பஸ் டெப்போக்கள், தமிழகப் போக்குவரத்துத் துறைனு தமிழகம் முழுக்க இந்த மாதிரி விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடத்த எங்களைக் கூப்பிடுறாங்க. லயன்ஸ் க்ளப்பைச் சேர்ந்தவங்கதான் எங்களை அதிகமா அழைப்பாங்க. எங்க நிகழ்ச்சி மூலமா பல நன்மைகள் நடந்திருக்கு. 

தற்கொலை எண்ணத்தைத் தடுக்க, சாலை விபத்துகளைக் குறைக்கதான் நாங்க அதிகமா விழிப்புஉணர்வு நிகழ்ச்சி பண்றோம். `அவ்வளவுதான் வாழ்க்கை'னு தற்கொலை பண்ணிக்கிறவங்களோட எண்ணிக்கை இப்போ அதிகமாகிட்டே வருது. `நமக்கெல்லாம் விபத்துகள் நடக்காது'னு அசட்டையா ஹெல்மெட் போடாம, போக்குவரத்து விதிகளை மதிக்காம வாகனத்தை ஓட்டுறது மாதிரியான செயல்களால்தாம் அதிகமான உயிர்ச்சேதம் ஏற்படுது.

அப்படிப்பட்டவங்களோட வாழ்க்கைச்சூழலை அவங்களுக்கே சுட்டிக்காட்டி, தவறை எடுத்துச் சொல்லி, பாதுகாப்பான சாலைப் பயணத்துக்கான அத்தனை ஆலோசனைகளையும் சொல்றோம். உதாரணமா, `நம்மை நம்பி ஒரு குடும்பம் இருக்குல்ல. நாம செத்துட்டா, அவங்க கதி என்னவாகும்?'னு அவங்க லெவலுக்கு இறங்கி, அவங்களை ஃபீல்பண்ணவைக்கிறோம்.

எங்க நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டு, உடனே கடைக்குப் போய் ஹெல்மெட் வாங்கினவங்க அதிகம். இன்னும் சிலர் எங்ககிட்ட வந்து, `நான் ஏன் வாழணும்னு ரொம்ப நாளா புழுங்கிக்கிட்டு இருந்தேன். நான் நிச்சயமா வாழணும்னு புரியவெச்சுட்டீங்க'னு சொல்லிட்டுப் போவாங்க. எங்க நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, குறைஞ்சது பத்து கிலோமீட்டராவது வண்டியை மெதுவா ஓட்டுறது, சீட் பெல்ட் அணியறதுன்னு வாகன ஓட்டிகள் போனாங்கன்னா, உயிர்ப்பலி நிச்சயமா குறையும்.

இந்த விழிப்புஉணர்வு எல்லா மக்களையும் சேரணும்கிறதுக்காக, `சித்திரை வீதி'ங்கிற படத்தை நானே தயாரிச்சு, இயக்கிக்கிட்டிருக்கேன். பொருளாதாரப் பிரச்னையால கொஞ்சம் தள்ளிப்போயிட்டிருக்கு.

திருப்பூர்ல இருக்கிற தனியார் கல்லூரி மூலமா கரூர்ல இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். இதுக்குக் கட்டணம்னு பெருசா வாங்குறதில்லை. வந்துபோற செலவுக்காக அவங்க கொடுக்கிறதை வாங்கிக்குவோம். இதுல சேவைதான் முதன்மை. இது, எங்களோட 5,250-வது நிகழ்ச்சி. சாலை விபத்துகள், தற்கொலை மூலம் மனித உயிர்கள் அநியாயமா அழிவதைக் குறைக்கிற வரை, எங்க விழிப்புஉணர்வு நிகழ்ச்சி தவம் நடந்துக்கிட்டே இருக்கும்" என்றபோது அவரின் சமூக அக்கறை வெளிப்பட்டது.Trending Articles

Sponsored