நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அனுமதி! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு



தேனியில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பங்களாமேடு பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் வாகனப் பேரணி நடத்த அனுமதிக்குமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி  உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sponsored


தேனியைச் சேர்ந்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற இயக்கத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகப் பொதுக்கூட்டம் மற்றும் வாகனப் பேரணி நடத்த மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டும் இதுவரை பதில் இல்லை. நாங்கள் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 13-ம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

Sponsored


இந்நிலையில், இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தேனி பங்களாமேடு பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க தேனி காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனர். மேலும், நிபந்தனைகளுடன் கூடிய விழிப்பு உணர்வு வாகன பிரசாரப் பயணம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து, அடுத்த ஓரிரு தினங்களில் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தேனியில் போராட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் என்றால், நியூட்ரினோ விஞ்ஞானிகள், தேனி தேவாரம் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று நியூட்ரினோ திட்டம் குறித்து மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sponsored




Trending Articles

Sponsored