டாஸ்மாக் காலி பாட்டில்களில் கள்ளச்சாராயம்! - கிருஷ்ணகிரியில் விற்பனை படுஜோர்



Sponsored



``கிராமங்களில் விற்பனைசெய்யப்படும் எரிசாராயத்தைக் குடித்துவிட்டு அப்பாவி மக்கள் பலர் இறக்கின்றனர்'' என்று தி.மு.க மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையை கலக்கமடையச் செய்துள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க மா.செ செங்குட்டுவனிடம் பேசினோம். ``தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்ட பிறகும், டாஸ்மாக் சேல்ஸ் மட்டும் குறையாமல் உள்ளது. இதற்கு கிராமங்கள் தோறும் உள்ள சந்துபொந்துகளில் மதுபானங்களைப் பதுக்கிவைத்து விற்பனைசெய்யப்படுவதே காரணம். நேரடியாக டாஸ்மாக் கடைகளில் மொத்தமாகக் கொள்முதல் செய்து, கூடுதல் விலைக்குக் கிராமங்கள் தோறும் மதுபானங்களை விற்பனைசெய்வது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிசைத் தொழிலாகவே செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதனால், காலை 6 மணிக்கெல்லாம் தங்கு தடையின்றி மதுபானங்கள் இதுபோன்ற இடங்களில் கிடைத்துவிடுகின்றன.

Sponsored


இதுபோன்ற இடங்களைக் குறிவைத்து, கள்ளச்சாராயம் மற்றும் எரிசாராயம் தயாரித்து, டாஸ்மாக் காலி பாட்டில்களில் நிரப்பி, போலியான மதுபானத்தை விற்பனைசெய்வது அதிகரித்துள்ளது. டாஸ்மாக் மதுபானம் என்று நம்பி வாங்கிக் குடிக்கும் பல அப்பாவி பொதுமக்கள், இந்த எரிசாராயத்தால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ,ஆலப்பட்டியில் ஏடிசி டிரைவர் சண்முகம், கிராமத்தில் கிடைத்த மதுபானத்தை வாங்கிக் குடித்தவர் அடுத்தநாள் காலையில் மரணம் அடைந்துள்ளார்.

Sponsored


இதை உடனே மாவட்ட காவல்துறை கண்காணித்துத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த அநியாயத்தைக் கண்டித்து பல போராட்டங்கள் நடத்திட வேண்டிவரும். உடனே காவல்துறை தனது மெத்தனப்போக்கை கைவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி., சரணவனிடம் பேசினோம். ``கிராமங்களில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். எரிசாராயம் என்பது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடையாது. எம்.எல்.ஏ., செங்குட்டுவன் குறிப்பிட்டுள்ள சண்முகம் இறப்புகுறித்து விசாரித்தோம். சண்முகம் தி.மு.க தலைவர் கருணாநிதி இறந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மாரடைப்பால் இறந்துள்ளதாக ஆலப்பட்டி தி.மு.க-வினர் பேனர் வைத்துள்ளனர். மற்றொரு நபர் தற்கொலை செய்துள்ளார். ஆனால் எம்.எல்.ஏ., ஏனோ எரிசாராயம் குடித்து இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்'' என்றார்.



Trending Articles

Sponsored