ஆசிரியருக்கான தேசிய விருது முறையில் மாற்றம் ஆரோக்கியமானதா? ஓர் அலசல்!Sponsoredஇந்தியக் குடியரசின் முன்னாள் தலைவரான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், கல்விப் பணியில் சிறப்பான பங்களிப்பு அளித்தவர். ஆசிரியர்களே அடுத்த தலைமுறையை நல்லவிதமாக வளர்த்தெடுக்கும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் எனக் கருதினார். அதனால், அவர் எங்கே பேசினாலும் ஆசிரியர்களைக் குறிப்பிடாமல் இருந்ததில்லை. இதனால், அவரின் பிறந்தநாளில் (செப்டம்பர் 5) ஒவ்வோர் ஆண்டும், சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை தேசிய மற்றும் மாநில அளவில் வழங்கப்படுகிறது. இதுநாள் வரை மாநில அரசு தேர்ந்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது கொடுக்கப்படும் முறை இருந்துவந்தது. தற்போது, அது மாற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக, விருதுபெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தொடக்க கல்வித்துறை சார்பில் 15 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறை சார்பாக 7 ஆசிரியர்களும், மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவருமாக 23 விருதுகளும் தரப்பட்டு வந்த நிலையில், தற்போது மிகவும் சொற்பமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. 

Sponsored


மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய முறை பற்றியும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் கல்வித்துறையில் சிலரிடம் கேட்டோம். பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர், ``ஆசிரியர்களுக்கான தேசிய அளவு விருது முறையில், சென்ற வருடம் வரை இருந்த நடைமுறையைச் சொல்கிறேன். மாவட்டத்தில் ஆசிரியர்கள் விண்ணப்பிப்பார்கள். அதனை மாவட்டக் கல்வி அலுவலர் பரிசீலித்து, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஆசிரியர்களை, மாநில மையத்துக்கு அனுப்புவார்கள். மாநிலம் முழுவதும் இதுபோல வரும் பரிந்துரைகளில் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்புவார்கள். அதன் அடிப்படையில் 23 சிறந்த ஆசிரியர்கள் விருதும், நான்கு ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி விருதுகளுமாக 27 விருதுகள் அளிக்கப்படும். 

Sponsored


புதிய முறையில், ஆசிரியர்களே மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (mhrd.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். அவற்றில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள். அந்த விண்ணப்பங்களை, மாவட்டக் கல்வி அலுவலகர் உள்ளிட்ட குழு ஆராய்ந்து, முதல் மூன்று இடங்களை மாநில மையத்துக்கு அனுப்பிவைக்கும். அதிலிருந்து அதிகபட்சம் ஆறு பேரை மட்டும் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யமுடியும். தேசிய அளவில் மொத்தம் 45 விருதுகளே அறிவிக்கப்படும். அவற்றிலிருந்து தமிழகத்துக்கு மூன்று பேருக்கு விருது கிடைக்கலாம்" என்றார். 

தேசிய விருதுபெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர் கருப்பையன், ``இந்தமுறையில், எந்த ஒளிவு மறைவு இல்லாமல், தகுதியானவருக்கு விருது கிடைக்கும். விருதுகளுக்கான எண்ணிக்கை குறைந்தது மட்டுமே கொஞ்சம் வருத்தம் தருவதாக இருக்கிறது" என்கிறார்.

இன்னும் சிலரிடம் பேசியபோது, இந்தப் புதிய முறையில் சாதகமாக, திறமையானவர்களுக்கு விருது கிடைப்பதற்கான கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் வகையில், மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பும் ஆசிரியர்களைப் பரிசோதிக்கும் முறை உள்ளதைக் குறிப்பிடுகிறார்கள். மேலும், விருது எண்ணிக்கை குறையும்போது, கவனம் அதிகமாகக் கிடைக்க வாய்ப்பும் உள்ளதாகவும் கூறுகிறார்கள். 

பாதகங்களாக, இணையதளத்தில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களால் மட்டுமே விண்ணப்பத்தை முழுமையாக நிரப்ப முடியும். சென்ற ஆண்டு வரை மெட்ரிகுலேஷன் ஆசிரியர்களுக்கும் விருது கிடைத்தது. இந்த முறையில் கிடைக்காது. மேலும், ஆசிரியர்கள் பல விஷயங்களைச் செய்திருந்தாலும், இணையதளத்தில் கேட்கும் கேள்விகளுக்குள் அவை அடங்காது என்பதால், சில விஷயங்களை அதில் சேர்க்க முடியாது என்கிறார்கள். Trending Articles

Sponsored