20 ஆண்டுகளில் 706 ஸ்க்ரீன்கள்... சத்யம் சினிமாஸை வாங்கவிருக்கும் நிறுவனத்தின் பின்புலம் என்ன?Sponsoredசென்னை நகர திரையரங்கங்களின் எக்ஸ்க்ளூஸிவாக விளங்குவது சத்யம் சினிமாஸ். இதை, டெல்லியைச் சேர்ந்த பி.வி.ஆர் நிறுவனம் கையகப்படுத்தியிருக்கிறது. 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சத்யம் சினிமாஸ், சென்னை மட்டுமல்ல ஆந்திரா, கேரளா, கர்நாடகம் எனத் தென் மாநிலங்களிலும் கோலோச்சிய நிறுவனம். தற்போது, சத்யம் சினிமாஸின் 2.22 லட்சம் பங்குகளை (71.69 சதவிகிதம்) பி.வி.ஆர் குழுமம் 850 கோடி ரூபாய் மதிப்புக்கு வாங்கியுள்ளதாம். 10 நகரங்களில் சொத்து வைத்துள்ள சத்யம் சினிமாஸுக்கு, 76 ஸ்க்ரீன்கள்  சொந்தமாக உள்ளன. இந்த நிறுவனம், 319.63 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளது. 

சத்யம் சினிமாஸை வாங்கியுள்ள பி.வி.ஆர் நிறுவனத்துக்கு, நாடு முழுவதும் 60 நகரங்களில் 152 காம்ப்ளெக்ஸ்கள் உள்ளன. 706 ஸ்க்ரீன்கள் இருக்கின்றன. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 420 கோடி ரூபாய். தற்போது சத்யம் சினிமாஸை வாங்கியுள்ளதால் உலகின் 7-வது மிகப்பெரிய `சினிமா எக்ஸிபிட்டர் (Cinema Exhibitor)' என்கிற அந்தஸ்த்தை பி.வி.ஆர் நிறுவனம் பெற்றுள்ளது. சென்னையில் ஏற்கெனவே பி.வி.ஆர் ஸ்கைவாக், கிராண்ட் மால் (வேளச்சேரி), கிராண்ட் கலாட்டா (பல்லாவரம்) ஆகிய இடங்களில் செயல்பட்டுவருகிறது. 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.வி.ஆர் நிறுவனம், 20 ஆண்டில்  இத்தகைய அசுர வளர்ச்சியை  எட்டியுள்ளது. 

Sponsored


47 வயதே நிரம்பிய அஜய் பிஜ்லி, இந்த நிறுவனத்தின் தலைவர். டெல்லி இந்துக் கல்லூரியில் படித்த அஜய் பிஜ்லி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றார். பிஜ்லியின் தந்தை, `அம்ரிஸ்டர்' என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். பட்டப்படிப்புக்குப் பிறகு, 22 வயதில் தந்தையின் நிறுவனத்தைக் கவனிக்கத் தொடங்கிய பிஜ்லியிடம், `நான் உருவாக்கிய நிறுவனத்தை வளர்ப்பதைவிட உனக்கென தனியான ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்' என்று தந்தை அறிவுரை கூறினார். இதற்கான வழி ஒன்றும் புலப்படவில்லை.

Sponsored


டெல்லியில் உள்ள பிரியா சினிமாஸை ஏற்கெனவே அஜ்ய் பிஜ்லியின் தந்தை நடத்திவந்தார். அப்போதெல்லாம் பிரியா சினிமாஸ் என்றால், டெல்லிவாசிகள் முகம் சுளிப்பார்கள். முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்த தியேட்டர் அது. தந்தையிடம் சென்று பிரியா சினிமாஸைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டார். தந்தையும் ஒப்புக்கொள்ள, பிரியா சினிமாஸை ஏற்று  நடத்தத் தொடங்கினார் பிஜ்லி. நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல தியேட்டர்களுக்குச் சென்று பார்த்தார். அதில், மும்பை ஸ்டெர்லிங் தியேட்டர் அஜய் பிஜ்லியைக் கவர்ந்தது.

அதைப்போலவே பிரியா சினிமாவை மாற்ற முடிவுசெய்தார். பிங்க் கலரில் பிரியா தியேட்டரின் வர்ணத்தை மாற்றினார். தியேட்டரின் உட்புறமும் அழகான இன்டீரியர் டிசைன் அமைத்தார். நவீன டாய்லெட்டுகளைக் கட்டினார். பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான யூனிஃபார்ம் வழங்கினார். தியேட்டரில் டிஜிட்டல் சிஸ்டம் பொருத்தப்பட்டது. `பரவாயில்லையே... பிரியா சினிமாஸ் மாறிவிட்டதே!' என்று மக்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கினர். மெள்ள மெள்ள பிரியா சினிமாஸ் மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்கத் தொடங்கியது. அதே நேரத்தில் பிரியா சினிமாஸ் அருகில் மெக்டொனால்டு, நிருலா, ஆர்ச்சிஸ் போன்ற நிறுவனங்ளும் தங்கள் கடையை விரித்தன. இதனால், எப்போதும் பிரியா சினிமாஸ் பகுதியில்  கூட்டம் ஜே ஜே போடும். 

ஆனால், பெருங்கனவுடன் இருந்த அஜய் பிஜ்லிக்கு, அடுத்து என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. சிங்கப்பூரில் ஒருமுறை யதேச்சையாக வில்லேஜ் ரோட்ஷோ நிறுவனத்தின் தலைவர் ஜான் கோவர்டைச் சந்தித்தார். இந்த கோவர்டுதான் பிஜ்லிக்கு இந்த ஐடியாவைக் கொடுத்தார். அஜய் பிஜ்லியின் நிறுவனத்தில் 40 சதவிகிதம் முதலீடு செய்யவும் ஜான் கோவர்ட் முன்வந்தார். இப்படித்தான் பிறந்தது `பிரியா வில்லேஜ் ரோட்ஷோ' நிறுவனம். சுருக்கமாக பி.வி.ஆர். ஆயிரம் இருக்கைகள்கொண்ட பெரிய தியேட்டர்களைக் கட்டுவதைவிட ஒரே காம்ப்ளெக்ஸில் பல ஸ்க்ரீன்களை  உருவாக்குவது எனத் திட்டமிட்டார். டெல்லியில் கட்டப்பட்ட பி.வி.ஆர்-தான் இந்த நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட முதல் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்.

2000-ம் ஆண்டில் 12 ஸ்க்ரீன்கள் பி.வி.ஆர் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்தன. 2006-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கி இந்த நிறுவனத்தில் 250 கோடி ரூபாய் முதலீடு செய்தது. அதற்குப் பிறகு, அஜய் பிஜ்லி திரும்பிப் பார்க்கவேயில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டில் 706 ஸ்க்ரீன்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போது சத்யத்தையும் வாங்கி புருவத்தை உயர்த்தவைத்துள்ளது. அனில் அம்பானியின் பிக் சினிமா, ஐநாக்ஸ், சினிமாக்ஸ் போன்ற நிறுவனங்கள் இதன் போட்டியாளர்கள்.  பி.வி.ஆர் நிறுவனம் குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அடுத்து 1000 ஸ்க்ரீன்களை எட்டுவது அஜ்ய் பிஜ்லியின் லட்சியமாம்.Trending Articles

Sponsored