`அந்த உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்'- செயற்குழுவில் அழகிரியை மறைமுகமாகச் சாடிய ஜெ.அன்பழகன்Sponsored`தி.மு.க தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம்’ என்று ஜெ.அன்பழகன்  நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


 

சென்னை  அண்ணா அறிவாலயத்தில் தற்போது,  தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்துக்குப் பிறகு பேசிய ஜெ.அன்பழகன்,   `60 ஆண்டு காலம் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக இருந்தவர். 80 ஆண்டுக்காலம் தன்னைப் பொதுவாழ்வில் அர்ப்பணித்துக் கொண்டவர். இந்திய அரசியலின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். நம்மை தவிக்கவைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக தலைவர் கருணாநிதியின் குரல் ஒலிக்கவில்லை. ஆனால், கலைஞரின் குரலாக நமது செயல் தலைவர் ஸ்டாலினின் குரல் ஒலித்தது. அதுதான், நாம் அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது. இப்போது கலைஞர் இல்லாமல் இனி எப்படி வாழப்போகிறோம் என்று தெரியவில்லை. நமக்கு இணை எதிரிகள் ஏராளமானோர் இருக்கும் நிலையில், அதை நாம் எப்படி முறியடிக்கப்போகிறோம்? அறிஞர் அண்ணா கூறியதுபோல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருக்க வேண்டும். அதிலும் கட்டுப்பாடு தற்போது மிகவும் அவசியம். நமது செயல் தலைவர் நாம் எப்படி கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று நம்மை வழிநடத்திவருகிறார். 

மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க முடியாது என்று ஆளும் அரசு சொன்னபோது, லட்சக்கணக்கான தொண்டர்கள் உணர்ச்சிப்பெருக்கில் எதுவும் பிரச்னை செய்யாதபடி  செயல் தலைவர் வழிநடத்தினார். அவரின் அணுகுமுறையும் கட்டுப்பாடும் அனைவரையும் ஈர்த்தது. நமது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைவராக வரப்போகிறவர். தி.மு.க தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம். நமக்கு எதிராகச் செயல்படும் அந்த உறவை செயல் தலைவர் ஸ்டாலின்  துண்டிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பவர்களைக் கண்டிக்க வேண்டும்’ என்று பேசி முடித்தார்.

`நமக்கு எதிராகச் செயல்படும் அந்த உறவு’ என்று அழகிரியை மறைமுகமாகத் தாக்கி அன்பழகன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored