`தமிழர்களைப் பார்த்துதான் விவசாயத்தைக் கத்துக்கணும்' - எலிசபெத் ராணி சொன்னதை நினைவுபடுத்திய நடிகர் ராஜேஷ்`` `உலகமே வேளாண்மையை இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று எலிசபெத் ராணி சொன்னார். 4,448 வியாதிகள் மனிதர்களுக்கு ஏற்படுவதை சித்தர்கள் கண்டறிந்தனர். அவற்றுக்கு மருந்து கண்டுபிடித்தவர் அகத்திய முனிவர்" என்று நடிகர் ராஜேஷ் பேசினார்.

Sponsored


கரூர் தான்தோன்றிமலை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பங்கேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேசிய நடிகர் ராஜேஷ்,  "ஒவ்வொருவருக்கும் சமுதாய சேவையாற்ற வேண்டும் என்ற சமூக சிந்தனை ஏற்பட வேண்டும். காமராஜர், கக்கன் மாதிரி மக்களுக்காகத் தன்னலம் இல்லாமல் பணியாற்ற வேண்டும். உலகிலேயே 8,000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசிக்கும் மக்கள் இந்தியர்களாகிய நாம்தான். மற்ற நாட்டினரெல்லாம் நாடோடிகளாகத்தான் வாழ்ந்தார்கள். நமது சித்தர்கள் உணவையே மருத்துவமாக்கியவர்கள். மனிதர்களுக்கு 4,448 வியாதிகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்தவர்களும் அவர்கள்தாம். இந்த வியாதிகளுக்கு மேல் வேற வியாதிகளே கிடையாது. இந்த வியாதிகள் அனைத்துக்கும் மருந்து கண்டுபிடித்தவர் அகத்திய முனிவர். நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை நாம் கடைப்பிடிக்க தவறிவிட்டோம். வாழை இலையில் உணவு சாப்பிட்டால் நரை, திரை எதுவும் வராது. வாரத்தில் இருநாள்கள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால், முடிகள் கொட்டாது. ஆனால், இப்போது யாரும் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பதில்லை.

நம் முன்னோர்கள் மாலை 7 மணிக்கெல்லாம் உறங்கிவிடுவார்கள். ஆனால், நாம் இரவு 1 மணி வரை வாட்ஸ்அப், டி.வி பார்க்கிறோம். அதனால், ஒன்பது மணிக்கு மேல் எதையும் பார்க்காதீர்கள். பத்து மணிக்குள்ளாவது தூங்கிவிடுங்கள். அனைத்து பறவைகளும் காலை 5 மணிக்கெல்லாம் விழித்துக்கொள்கின்றன. ஆனால், நம்மில் பலர் எட்டு மணிக்குதான் எழுந்திருக்கிறோம். சீக்கிரம் எழ பழக வேண்டும். இயற்கை சமநிலையடையணும்னா, மரங்களை வெட்டக் கூடாது. அதற்காகத்தான் நம் முன்னோர்கள் அவற்றைத் தெய்வமாக வழிபட்டார்கள். 1857-ல் ஏற்பட்ட பஞ்சத்தால் நம்நாடு உருக்குலைந்தபோது, அதை எலிசபெத் ராணி ஆய்வு செய்யச் சொன்னார். அவற்றை ஆய்வு செய்த ஆங்கிலேயர்கள் அந்த ஆய்வு அறிக்கையை ராணியிடம் வழங்கினார்கள். அதன்பிறகு, எலிசபெத் ராணி, 'உலகமே வேளாண்மையை இந்தியாவை, குறிப்பாக தமிழர்களைப் பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்'னு பெருமையாகக் கூறினார். ஆனால், அத்தகைய விவசாயமும் விவசாயிகளும் இன்றைக்குத் தமிழகத்தில் நலமாக இருக்கிறார்களா, படித்த இளைஞர்கள் தயங்காமல் விவசாயத்தில் இறங்க வேண்டும்" என்றார்.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored