`அடுத்த பிரதமரையே நாம் முடிவு செய்வோம்!' - இடைத்தேர்தல்களுக்காக `குபீர்’ உற்சாகத்தில் தினகரன் Sponsoredஇடைத்தேர்தலோடு சேர்த்து நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தயாராகி வருகிறார் டி.டி.வி.தினகரன். `தேர்தல் நேரத்தில் நம்முடன் கூட்டணி அமைக்கப் பலரும் வருவார்கள். பிரதமரையே நாம்தான் தேர்வு செய்யப்போகிறோம்' என நிர்வாகிகளுடன் பேசியிருக்கிறார் தினகரன். 
    
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறார் தினகரன். கருணாநிதி, ஏ.கே.போஸ் மறைவுக்குப் பிறகு, `திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலி' என அறிவிக்கப்பட்டுவிட்டன. வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பேசி வருகிறார் தினகரன். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க நிர்வாகி ஒருவர், ``திருவாரூர் தொகுதியில் இப்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டோம். வேட்பாளர் யார் எனக் குறிப்பிடாமல், `குக்கர் சின்னத்துக்கே உங்கள் வாக்கு' எனச் சுவர் விளம்பரங்களையும் எழுதத் தொடங்கிவிட்டோம். 

ஆர்.கே.நகரைத் தொடர்ந்து இந்த இரண்டு இடைத்தேர்தல்களையும் பெரிதாக நம்பியிருக்கிறார் தினகரன். இதிலும் வெற்றி பெற்றுவிட்டால், 'நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக இருக்கும்' என நம்புகிறார். ஒருவேளை காங்கிரஸ் அணியில் இடம் கிடைத்துவிட்டால், அதிக சீட்டுகளைப் பெறுவதற்கும் இந்த வெற்றி வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கிறார். எங்களிடம் கடந்த 12-ம் தேதி மாலை பேசும்போது சில விஷயங்களைப் பட்டியலிட்டார். அவர் பேசும்போது, 'கடுமையான சூழலில் எனக்கு உதவியாக இருந்தவர்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன். சொல்லப்போனால், எனக்கு டீ வாங்கிக் கொடுத்தவரைக்கூட மறக்க மாட்டேன். நாடாளுமன்றத் தேர்தலுக்காக 11 மண்டலங்களாகப் பிரித்து பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம். யாரும் பதவிக்காக இல்லீகல் வேலைகளைச் செய்ய வேண்டாம். ஒவ்வோர் ஊரிலும் கட்சிக்கு அப்பாற்பட்டு எனக்கு ஆட்கள் இருக்கிறார்கள். சேலஞ்சர் துரை (கோவை) வசிக்கும் அப்பார்ட்மென்ட்டுக்குப் பக்கத்திலேயே எனக்கு ஆட்கள் இருக்கிறார்கள். யாருக்கும் எதுவும் தெரியாது என நினைத்துவிட வேண்டாம். 

ஒருவருடைய முகத்தைப் பார்த்தே, அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை அம்மா கொடுத்திருக்கிறார் (இறைவன் எனக் கூற வந்தவர், அம்மா என மாற்றிவிட்டார்). நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்தையும் செய்வோம். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை இலக்காக வைப்போம். நம்மால் நிச்சயம் முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார் ஜெயலலிதா. நாம் புதுச்சேரியோடு சேர்த்து 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். கூட்டணிக்காக நம்மிடம் அனைவரும் வருவார்கள். அடுத்த பிரதமரையே நாம்தான் முடிவு செய்வோம்' எனப் பேசினார். ஜெயலலிதாவின் உற்சாகத்தையே விஞ்சும் வகையில்தான் அவருடைய பேச்சு இருந்தது. இதெல்லாம் சாத்தியமா என யாருக்கும் கேள்வி எழவில்லை. தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசிய பேச்சுதான் இது!" என்றார் விரிவாக.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored