"நிலக்கரி விவகாரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.6,000 கோடி ஊழல்!" - அம்பலப்படுத்தும் அறப்போர் இயக்கம்Sponsored``தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரி வாங்கியதில் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் செய்திருக்கிறது'' என ஆதாரங்களுடன்  அம்பலப்படுத்தியிருக்கிறது அறப்போர் இயக்கம். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ``இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 2012 முதல் 2016-ம் ஆண்டுவரை நிலக்கரி வாங்குவதற்காகத் தமிழ்நாடு மின்வாரியம் உலகளாவிய டெண்டர் கோரியது. அதில், அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட், நாலேஜ் இன்டர்நேஷனல் ஸ்ட்ரேடஜி சிஸ்டம் பிரைவேட் லிமிடெட், செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், எம்.எம்.டி.சி லிமிடெட், எம்.எஸ்.டி.சி லிமிடெட் ஆகிய ஐந்து நிறுவனங்களிடமிருந்து ரூ.12,250 கோடிக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.1,730 முதல் ரூ.3,025 கோடி வரை ஊழல் நடந்திருப்பதை அறப்போர் இயக்கம் ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருந்தது. அது, இந்தோனேஷியாவிலிருந்து வாங்கிய நிலக்கரியின் சந்தை மதிப்பில், மொத்தக் கலோரிஃபிக் மதிப்பான (Gross calorific value -as received) 5,500  (Kcal/Kg) ஆகும். ஆனால், மொத்தக் கலோரிஃபிக் மதிப்பை 6,000 என அதிகமாக மதிப்பீடு செய்து கணக்குக் காட்டியிருப்பது இதன்மூலம் தெரியவந்தது. இதனால், ஒரு மெட்ரிக் டன்னுக்கு 8 டாலர் முதல் 10 டாலர்கள் வரை வித்தியாசம் இருப்பதும் தெரியவந்தது. சந்தை மதிப்பில் நடந்துள்ள இந்த ஊழலை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், தற்போது தரத்தின் அடிப்படையில் செய்துள்ள ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Sponsored


ஏற்றுமதியின்போது சுங்கத் துறை, நிலக்கரியின் தரத்தை ஆய்வு செய்வது விதிமுறை. அப்படிச் செய்த ஆய்வில்தான் 25 சதவிகிதம் வரை தரத்தின் மதிப்பு இறக்குமதியில் அம்பலமாகியுள்ளது. தமிழக அரசு எடுத்த நிலக்கரி கலோரிஃபிக் தரத்தின் அளவு 6,000 என்று கூறியுள்ளது. ஆனால், சுங்கத் துறை எடுத்த கலோரிஃபிக் தரத்தின் அளவு 4,500 எனத் தெரியவந்துள்ளது. அரசு கொடுத்த கொள்முதல், தரத்தின் அளவைவிட 1,500  குறைவாக உள்ளது. இதனால் தமிழக அரசுக்குச் சுமார் 2,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சுங்கத் துறை கொடுத்துள்ள 4,500 கலோரிஃபிக் தரத்தின் அளவுக்கு ஏற்ற மதிப்பில் அரசாங்கம் கொள்முதல் செய்திருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் கூடுதல் விலை கொடுத்து குறைவான தரமுள்ள பொருளை வாங்கியுள்ளது.

Sponsored


இதைக் குறித்து சி.ஏ.ஜி அறிக்கையில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க... மறுபுறம், அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், நடப்பாண்டு (2018-ம் ஆண்டு) நிலக்கரி ஒப்பந்தம் குறித்த தகவலை வாங்கியுள்ளது. அதில் இந்த ஆண்டு வாங்கிய நிலக்கரிச் சந்தை மதிப்பைவிட ஒரு டன்னுக்கு 15 ஆயிரம் டாலர் வரை குறைவாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கியுள்ளது. ஆனால்,  2012 முதல் 2016-ம் ஆண்டுவரை பெறப்பட்ட நிலக்கரிச் சந்தை மதிப்பைவிடக் கூடுதலான விலைக்கு வாங்கியிருந்தது. அதுகுறித்து நாம் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், தற்போது வாங்கப்பட்ட நிலக்கரிச் சந்தை மதிப்பைவிடக் குறைவான விலைக்கு வாங்கியுள்ளது. இந்த இரண்டு ஒப்பந்த கொள்முதல்களையும் வைத்து ஒப்பிடுகையில், கடந்தமுறை வாங்கப்பட்ட  நிலக்கரியில் 1,500 கோடி ரூபாய்  இழப்பு ஏற்படுகிறது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ஒட்டுமொத்தமாக வாங்கும்போது சந்தை மதிப்பிலிருந்து குறைவாக வாங்க முடியும் என்பது தெளிவாகிறது. இப்படிப் பலவகையில் முறைகேடு செய்து 6,000 கோடி ரூபாய்வரை ஊழல் செய்துள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அப்போதைய தலைவர்களான ஞானதேசிகன் மற்றும் சாய்குமார் ஆகியோருக்கும் முக்கியப் பங்கிருப்பது தெளிவாகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார், மிகத் தெளிவாக.

ஊழல் இல்லாத இடம் உண்டோ?      Trending Articles

Sponsored