ரஜினி மீது தமிழிசைக்கு அப்படியென்ன கோபம்? - பின்னணி நிலவரம்Sponsoredபா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவர்கள் ரஜினியின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். ஆனால், ரஜினியைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை. `பா.ஜ.க-வின் முயற்சிகளுக்கு ரஜினி சம்மதம் தெரிவிக்காமல் இருப்பதன் ஒருபகுதியாகத் தமிழிசை பேசுகிறார்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

`புதிய கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் ரஜினி' என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அரசியல் களத்தில் புதிதாகத் தோன்றக்கூடிய கட்சிகளுக்கு வரவேற்பு பெரிதாக இருக்கும். தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே, புதிய கட்சிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்ற உண்மை தெரிய வரும். அந்தவகையில், ரஜினியின் புதிய கட்சியை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது பா.ஜ.க தலைமை. கடந்த மாதம் நாமக்கல் கிறிஸ்டி ஃபிரைடு கிராம், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை ஆகியோரை குறிவைத்து வருமான வரித்துறை களமிறங்கியது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான பலரும் சிக்கினர். இதுகுறித்துப்  பேசிய பா.ஜ.க நிர்வாகிகள், `தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க தவிர்த்து, ரஜினியோடு கைகுலுக்கவே விரும்புகிறார் அமித் ஷா. அவருக்குச் சில விஷயங்களை உணர்த்துவதற்காகவே ரெய்டு நடத்தப்பட்டது. இது ஓர் ஊழல் மிகுந்த அரசு என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகவே ரெய்டு நடத்தப்பட்டது' எனத் தெரிவித்தனர். அதற்கேற்ப, கடந்த மாதம் சென்னை வந்த அமித் ஷாவும், 'ஊழல் நிறைந்த மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு' என விமர்சித்தார். இந்த அதிரடிகளால் அ.தி.மு.க வட்டாரம் அதிர்ந்தது. 

இதன் பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கும் ராஜ்ய சபா துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் அ.தி.மு.க தலைமையின் தயவை பா.ஜ.க எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், ரஜினி குறித்து நாளிதழ் ஒன்றுக்கு விரிவான பேட்டி கொடுத்தார் பிரதமர் மோடி. அதில், `ரஜினிகாந்த் அரசியல் கட்சித் தொடங்கினால், அந்தக் கட்சியோடு பா.ஜ.க கூட்டணி அமைக்குமா' என்ற கேள்விக்கு, 'சந்தேகமில்லாமல் ரஜினிகாந்த்தை அவருடைய சாதனைகளுக்காக நான் மதிக்கிறேன். ஆனால், நிச்சயமாக யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்' என்றார். ரஜினிக்குச் சாதகமாக இந்தப் பதில் இருந்தாலும், 'பா.ஜ.க கூட்டணிக்குள் ரஜினி வர வேண்டும்' என்ற கருத்தை முரளிதர் ராவ் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். 

Sponsored


இதற்கிடையில், ரஜினி குறித்துப் பேசிய தமிழிசை, 'கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரிய தலைவர்கள் இல்லாததால் தமிழக அரசியல் களம், இதுவரை பார்த்திராத களமாகத்தான் இருக்கும். எனவே, இல்லாத வெற்றிடத்தைத் திடீரென வரும் நடிகர்களால் நிரப்ப முடியாது. கருணாநிதி, ஜெயலலிதா எல்லாம் போராடித்தான் உயர்ந்த இடத்துக்கு வந்தனர்' எனப் பேட்டி அளித்திருந்தார். அகில இந்திய தலைமையின் முடிவுக்கு எதிராகத் தமிழிசை இவ்வாறு பேசியிருப்பது பா.ஜ.க தொண்டர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், "பா.ஜ.க தலைமையின் முடிவுக்கு எதிராக இதுவரையில் தமிழிசை பேசியதில்லை. நிர்மலா சீதாராமன், முரளிதர் ராவ் உள்ளிட்டோர் ரஜினியின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், இதற்கு ரஜினியின் பக்கம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

Sponsored


18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இன்னும் ஒரு வார காலத்துக்குள் தீர்ப்பு வரவிருக்கிறது. அந்தநேரத்தில் அரசியல் சூழல்களும் மாறக்கூடிய நிலை உருவாகும். அதற்குள் பா.ஜ.க கூட்டணிக்குள் ரஜினி வந்துவிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு. இதில் தாமதம் ஏற்படுவதால்தான் தமிழிசையைப் பேச வைக்கிறார்களோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. பா.ஜ.க-வின் முயற்சிகளுக்கு ரஜினி செவிசாய்த்திருந்தால் தமிழிசை இப்படியொரு ஸ்டேட்மென்ட்டை விட வேண்டிய அவசியம் வந்திருக்காது. மேலிடத்தின் அனுமதியில்லாமல், தமிழிசை இவ்வாறு பேசுவதற்கு வாய்ப்பில்லை. தவிர, தமிழக பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணமும் தமிழிசைக்கு இருக்கிறது" என்றார்.

ரஜினி எதிர்ப்பு குறித்து தமிழிசையிடம் விளக்கம் கேட்டோம். "இந்த நிலைப்பாட்டை நான் திடீரென எடுக்கவில்லை. நான் சொல்லும் வெற்றிடம் என்பது வேறு. 50 வருடங்களாக உழைத்து, மக்கள் மனதில் இடம் பிடித்தார் கருணாநிதி. இந்த இடத்தைத் திடீரென வருபவர்களால் நிரப்ப முடியாது என்றுதான் பேசி வருகிறேன். அதேநேரம், கூட்டணி வைப்பது, பலத்தைக் கூட்டிக்கொள்வது என்பதெல்லாம் வேறு. ஏற்கெனவே இங்கு களத்தில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். மிகப் பெரிய மலைகள் இல்லாததால், சமமான களச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநேரத்தில் புதியவர்களுக்கு வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. மக்களுக்காகக் கடுமையாக உழைத்தால், கருணாநிதி, ஜெயலிலதா ஆகியோரின் இடத்தை நம்மால் பிடிக்க முடியும். எனவே, முதலமைச்சர் வேட்பாளர் இல்லையே என்றெல்லாம் கூற முடியாது’ என்றவரிடம், 'பா.ஜ.க-வின் முயற்சிக்கு ரஜினி செவிசாய்க்காமல் இருப்பதுதான் பிரதான காரணமா' என்றதற்கு, 'அப்படியெல்லாம் இல்லை' என்றதோடு முடித்துக்கொண்டார். 
 Trending Articles

Sponsored