தகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்!Sponsoredபட்டுக்கோட்டை அருகே நரியம்பாளையம் பகுதியில் தகராறு செய்த ரவுடியைப் பொதுமக்களே அடித்துக்கொன்றனர். மேலும், ரவுடியின் நண்பர் ஒருவரும் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை அருகே சாந்தாங்காடு வெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் `தம்பா’ கார்த்தி. ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு  வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு கார்த்தி மற்றும் அவரின் நண்பர் டேனியல் ஆகிய இருவரும் நரியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தகராறு செய்ததோடு, தகாத வார்த்தைகளைச் சொல்லி சத்தமாகப் பேசியுள்ளனர். அவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த எதிர் வீட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், தகராறு செய்த இருவரையும் தட்டிக்கேட்டுள்ளார். எங்களை யார் எனத் தெரியுமா என்றதோடு எதிர்த்துப் பேசுகிறாயா எனக் கேட்டு கார்த்தி மற்றும் டேனியல் ஆகியோர் ராமச்சந்திரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற ஆத்திரம் அடைந்த இருவரும், `நாங்கள் ஆள்களைக் கூட்டி வருகிறோம். உன்னை என்ன செய்கிறோம் பார்’ எனக் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

Sponsored


பின்னர், சிறிது நேரம் கழித்து இரண்டு பேரும் ஆள்களை அழைத்துக்கொண்டு அந்தப் பகுதிக்கு வந்தனர். மேலும், ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்று மீண்டும் தகராறு செய்து தகாத வார்த்தைகளில் பேசி சண்டை போட்டதோடு, அவரைத் தாக்கவும் முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் சத்தம் போட்டுள்ளார். அவரின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். தகராறு செய்த கார்த்தியையும் டேனியலையும் அவர்கள் தட்டிக்கேட்டனர். ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் கார்த்தி, டேனியல் ஆகியோர் தொடர்ந்து சத்தம் போட்டுப் பேசிக்கொண்டே இருந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், திடீரென கோபமாகி ஆவேசத்துடன் கையில் கிடைத்த கம்பு கட்டைகளைக் கொண்டு 2 பேரையும் தாக்கினர். இதில் `தம்பா’ கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் நண்பர் டேனியல் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் நின்றவர்கள் உயிருக்குப் போராடிய டேனியலை தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகராறு செய்த ரவுடியைப் பொதுமக்களே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக் கருதி குவிக்கப்பட்டுள்ளனர்

Sponsored
Trending Articles

Sponsored