மெரினாவில் இடம் அளிக்க முதலில் அரசு மறுத்தது ஏன்? - அ.தி.மு.க விளக்கம்Sponsoredறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்குத் தமிழ்த் திரையுலகம் சார்பில் சென்னையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அ.தி.மு.க அரசையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சனம் செய்து பேசியிருந்தார். கருணாநிதியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முதல்வர் ஏன் கலந்துகொள்ளவில்லை எனக் கேள்வி எழுப்பியதுடன், கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் சென்றிருந்தால், தானே தலைமையேற்று போராட்டத்தில் இறங்கியிருப்பேன் என்றும் ரஜினி குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு அ.தி.மு.க-வினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் நடைபெற்ற கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில், திரைப்படத் துறையினர் பலரும் அவருடைய உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று, நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து மெழுகுவத்தி ஏற்றி, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்.

Sponsored


இந்தக் கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த், ``கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. தமிழகத்துக்கு மிகப்பெரிய அடையாளமாக இருந்தவர் கலைஞர். இனிமேல், மற்ற மாநிலங்களில் உள்ள பெரிய தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து சந்தித்துவிட்டுப் போகக்கூடிய அளவுக்கு, இங்கு தலைவர்கள் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை'' என்றார். மேலும் அவர், ``கருணாநிதியின் இறுதிச்சடங்கில் இந்தியத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தமிழகக் கவர்னர் தொடங்கி, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரண்டு மூன்று மணிநேரம் காத்திருந்து, அந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். ஆனால், தமிழகத்தின் முதல் பிரஜையான முதல்வர் அங்கு வர வேண்டாமா, மந்திரி சபையே அங்கிருக்கக் கூடாதா, முதல்வர் என்ன எம்.ஜி.ஆரா அல்லது ஜெயலலிதாவா'' என்று முதல்வரையும் அ.தி.மு.க ஆட்சியாளர்களையும் வசைபாடினார். தவிர, ``கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது. மேல்முறையீட்டுக்குப் போகவில்லை; மேல்முறையீட்டுக்குப் போயிருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்'' என்று ஆவேசமாகப் பேசினார். 

Sponsored


ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சு குறித்து பலரும் தங்களின் கருத்துகளைச் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பதிவுசெய்து வருகின்றனர். குறிப்பாக, `ரஜினிகாந்த், நன்றாக அரசியல் செய்துவருகிறார்' எனப் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். 

ரஜினியின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ``ரஜினிக்குத் தமிழக அரசியல் வரலாறு தெரியாது. ஷூட்டிங்கும் மீட்டிங்கும் அவருக்கு ஒன்றாகிவிடாது. அவர் கருணாநிதியின் தொண்டர்களைத் தன் பக்கம் இழுக்கவே அதுபோன்று பேசியிருக்கிறார். கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் பேசியது, அவரின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவர் இப்படிப் பேசியிருப்பாரா. அப்போது, ரஜினி பேசியிருந்தால் பாராட்டியிருக்கலாம். ஆனால், ரஜினி இப்போது இப்படிப் பேசுவது கோழைத்தனமானது'' என்றார்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சு குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் பேசினோம். ``தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுச் செய்தியை அறிந்ததும், இறுதிச் சடங்குக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் மூலம் செய்துகொடுத்தார். முன்னதாக, கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சென்று உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் மறைவையொட்டி, தமிழக அரசு ஏழு நாள்கள் துக்கம் அனுசரித்தது. அதுமட்டுமல்லாமல், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரகாலத்துக்கு ரத்து செய்யப்பட்டன. தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று அரசு சார்பில் அறிவித்து, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அதன்படியே, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மெரினாவில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால், அரசியல் நாகரிகம் தெரியாத நடிகர் ரஜினிகாந்த், அரைவேக்காட்டுத் தனமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை கருணாநிதியால் முதல்வர் ஆக முடியவில்லை. என்றாலும், எம்.ஜி.ஆர் இறுதிவரை கருணாநிதியுடன் நட்புடனேயே இருந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா, அ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்றபோதும், பல தொல்லைகளைக் கொடுத்தவர் கருணாநிதி. அவற்றையெல்லாம் மறந்து, கருணாநிதியின் உடல் அடக்கம் செய்வதற்கு தற்போதைய அ.தி.மு.க அரசுதான் அனைத்து உதவிகளையும் செய்தது. 

மெரினாவில் உடல் அடக்கம் செய்வது தொடர்பாக ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததால்தான், கருணாநிதியின் உடல் அடக்கத்துக்கு கிண்டியில் இடம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. மேலும், மெரினாவில் இடம் ஒதுக்குவதில் உள்ள பிரச்னைகளை தி.மு.க. சரிசெய்துகொண்டு வந்தால், அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே மெரினா தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இறுதியில் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு மெரினாவிலும் இடம் கிடைத்தது. இந்த விஷயங்கள் அனைத்தும் தெரியாமல், ஆளும் அ.தி.மு.க அரசுமீது வேண்டுமென்றே காழ்ப்பு உணர்ச்சியுடன் பேசுகிறார் நடிகர் ரஜினிகாந்த்'' என்றார் மிகத் தெளிவாக.

தமிழக அரசியல் களத்துக்கு ரஜினி தயாராகிவிட்டார்... Trending Articles

Sponsored