அ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!



தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிகாரியாகப் பணியாற்றிய வட்டாட்சியர் காளிராஜ் என்பவரை ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறி அவர்களைக் கண்டித்தும் வட்டாட்சியர் அளித்த புகார்  மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   

Sponsored


தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கியில் 11 இயக்குனர்கள் பதவிகளுக்காக 68 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில், கடந்த 11-ம் தேதி 25 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் ஒட்டப்பட்டது. இதற்கிடையில் மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று (13.08.2018) வரை 8 பேர் திரும்பப் பெற்றனர். இதில், சண்முகநாதன் ஆதரவாளரான கோபிகிருஷ்ணன் என்பவரது மனுவை வேறொரு நபர், போலியாகக் கையெழுத்திட்டு திரும்பப் பெற்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Sponsored


இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் ஆகியோரிடம் புகார் அளிக்கச் சென்றார். அதிகாரிகள் இல்லாததால் திரும்பிச் சென்றார். அதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் ஆதரவாளரும் தேர்தலில் விண்ணப்பித்தவர்களில் ஒருவரான அமிர்த கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்து, “அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்களுக்குள்தான் போட்டியிடுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் சண்முகநாதன், ஆதரவாளர்களுடன் வங்கி அலுவலகத்துக்குள் புகுந்து வேட்புமனுக்கள், இறுதிப்பட்டியல் தயார் செய்த வேட்பு மனுக்கள் என அனைத்தையும் கிழித்து போட்டதுடன் தேர்தல் அதிகாரியையும் மிரட்டிச் சென்றுள்ளனர். ஒரே கட்சியில் இருந்துகொண்டு இப்படிச் செய்தது நியாயமா” எனப் பகீர் புகாரைக் கிளப்பினார். 

Sponsored


இந்தப் பிரச்னையால் இரண்டாவது முறையாகத் தேர்தலை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்து, தேர்தல் அதிகாரி காளிராஜ் கையெழுத்திட்ட அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்நிலையில், இன்று கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எம்.எல்.ஏ சண்முகநாதனை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். 

இப்புகார் குறித்து தேர்தல் அதிகாரியான வட்டாட்சியர் காளிராஜிடம் பேசினோம், ``சண்முகநாதன் அவரின் ஆதரவாளர்களுடன் வங்கி அலுவலகத்துக்குள் வந்தார். நாற்காலியில் அமர்ந்திருந்த என்னை, நாற்காலியுடன் இறுக்கமாக அமுக்கிப் பிடித்தார். நான் எழுந்ததும், சுவரில் தள்ளினார். இதற்கிடையில், அவரின் ஆதரவாளர்கள் என்னை தகாத வார்த்தைகளால் பேசி, மேஜையில் வைத்திருந்த அனைத்து வேட்புமனுக்களையும் கிழித்துவிட்டனர். இதுதொடர்பாகக் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்துள்ளேன்” என்றார்.

இப்புகார் குறித்து சண்முகநாதனிடம் பேசினோம். ``வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களில் போலி நபர்கள் மூலம் போலிக் கையெழுத்து போடப்பட்டு வேட்புமனு வாபஸ் வாங்கியதாகப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்குக் களங்கம் ஏற்படுத்த நினைக்கும் வகையில் அதிகாரிகளே பணம் வாங்கிக்கொண்டு இப்படிச் செயல்படுகிறார்கள். நான் அலுவலகம் செல்லும்போது தேர்தல் அதிகாரி அங்கு இல்லை. அவரை நான் நேரில் பார்த்ததே இல்லை” எனக் கூறினார். நீயா நானா போட்டியில் சண்முகநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோரது தரப்பு வெளிப்படையாகவே மோதிக் கொள்கிறார்கள்.  



Trending Articles

Sponsored