அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்தக்கோரி பொதுமக்கள் நடத்திய டென்ட் கொட்டகைப் போராட்டம்!Sponsoredஅரசுப் பள்ளியைத் தரம் உயர்த்தாததைக் கண்டித்து மாணவ-மாணவிகள், பொதுமக்கள் டென்ட் கொட்டகை போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா அழகாபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம்போல் இன்று 8.45 மணி அளவில் கூடவேண்டிய பள்ளியில் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரண்டு அரசுப் பள்ளியை தரம் உயர்த்தாததைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஆண்டிமடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ``மாவட்டக் கல்வி அலுவலர்கள் இங்கு வந்து உறுதியளிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் கலைந்து செல்வோம்" என்று தடாலடியாக அறிவித்தனர். மக்களின் இந்த அதிரடி அறிவிப்பால் இப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.  

Sponsored


                                       போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசினோம். ``இந்தப் பள்ளி 1953 முதல் உயர்நிலைப்பள்ளியாக இயங்கிவருகிறது. தற்பொழுது இந்தப் பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் 10-ம் வகுப்பு முடித்த பிறகு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குத்தான் செல்லவேண்டும். தூரமாக இருப்பதால் 10-ம் வகுப்போடு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இந்த நிலையில் இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென்று பெற்றோர்கள் முடிவு செய்து பள்ளிக் கல்வித்துறையை அணுகினர். அவர்கள் பரிசீலனை செய்து அதற்குத் தேவையான இடம் ஏற்கெனவே உள்ளதால் வைப்புத் தொகை மட்டும் கட்டச் சொன்னார்கள். அதன் பேரில் கடந்த 2016-ம் ஆண்டு வங்கியில் பணம் செலுத்தினோம். ஆனால், இன்று வரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தரம் உயர்த்தக் கோரி முதல்வர், எம்.எல்.ஏ, கலெக்டர் வரை மனு கொடுத்தோம். அவர்களும் தரம் உயர்த்துவதாக நம்பிக்கை அளித்தார்கள். ஆனால், ஒரு சிலவசதிகளே இல்லாத இரண்டு பள்ளிகளை தற்போது தரம் உயர்த்தியிருக்கிறார்கள். நாங்கள் பலமுறை கலெக்டர்களைச் சந்தித்து மனு கொடுத்தும் எந்தப் புண்ணியமும் இல்லாமல் போய்விட்டது.  அழகாபுரத்தில் உள்ள பள்ளியை தரம் உயர்த்தாததைக் கண்டித்து மாணவ-மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் பள்ளிவாசலுக்கு வெளியில் கொட்டகை போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு வெற்றிகிடைக்கும் வரையிலும் போராட்டம் தொடரும்" என்றனர். 

Sponsored
Trending Articles

Sponsored