`அதிமுக நண்பனுக்கு வாழ்த்துச் சொல்லக்கூடாதா?' -பதவியை உதறித்தள்ளிய திமுக நிர்வாகிSponsored``நண்பனுக்கு வாழ்த்து சொல்லக்கூட சுதந்திரம் இல்லாத பதவி தேவையில்லை'' என அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் அசோகனுக்கு வாழ்த்துச் சொன்ன தி.மு.க மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன் ராஜினாமா செய்தார்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக எஸ்.ஏ.அசோகன் கடந்த வாரத்தில் பதவி ஏற்றார். அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். எஸ்.ஏ.அசோகனுக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றியிருந்தார் எம்.ஜே.ராஜன். இது குறித்து விகடன்.காம் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அப்போது எஸ்.ஏ.அசோகன் தனது பால்ய நண்பன் என்றும், ஒரே தெருவைச் சேர்ந்தவர் என்பதால் அரசியல் நாகரிகம் கருதி அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Sponsored


கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுரேஷ்ராஜனுக்கு எம்.ஜே.ராஜன் அனுப்பியுள்ள கடிதத்தில், ``இந்தப் பதவியிலிருந்து ஒரு நண்பனுக்கு வாழ்த்து சொல்லக்கூட சுதந்திரம் இல்லாததால் எனது 46வது வட்டச் செயலாளர் மற்றும் மாவட்டத் தொண்டரணி அமைப்பாளர் ஆகிய இரண்டு பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். ராஜினாமா செய்தது குறித்து எம்.ஜே.ராஜனிடம் கேட்டதற்கு, ``நட்பு ரீதியாக நான் வாழ்த்து கூறியதாக மாவட்டச் செயலாளரிடம் கூறினேன். ஆனாலும் கட்சியில் சிலர் என்னை ஓரம்கட்டியதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்" என்றார். அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு வாழ்த்து கூறிய விவகாரத்தில் தி.மு.க மாவட்டத் தொண்டரணி அமைப்பாளர் ராஜினாமா செய்த சம்பவம் குமரி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored