`தேர்தலை நடத்துங்க; இல்ல கிராமத்தில் அமைச்சர்கள் குடியிருங்க'- கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் ஆவேசம்



"உள்ளாட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் எங்கள் கிராமத்தில் இந்த அதிகாரிகளும் அமைச்சர்களும் குடியிருக்க வேண்டும்" என்று ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் கொந்தளித்தனர்.

Sponsored


நாடு முழுவதும் இன்று 72-வது சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இரண்டாவது சுதந்திர தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நடத்தினர். அரியலூர் மாவட்டம் மணக்கால் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்கள், கிராம வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்துப் பேசினார். அப்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்களுக்கான திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் உள்ளதாகக் கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர். 

Sponsored


எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களிடம் பேசினோம். “கிராம சபைக் கூட்டங்கள் சம்பிரதாயத்துக்காகவே நடத்தப்படுகின்றன. எங்களுடைய கஷ்டங்களை புரிந்துகொள்ளாத அரசாங்கம் எங்களுக்குத் தேவையா? எங்களுக்காக எங்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரோ, கவுன்சிலர்களோ இல்லாமல் கடந்த இரண்டு வருடமாக ஊராட்சிகளின் பணிகள் தேக்கமடைந்துள்ளன. குடிநீர், மின்வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றை யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் உள்ளோம். கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு எங்கள் பகுதியில் இருபது நாள்களாக குடிநீர் வரவில்லை. முன்னாள் தலைவரிடம் எங்கள் மக்கள் மனுக்கொடுத்தால் நான் சொன்னா கேட்கமாட்டார்கள். நீங்களே ஆட்சித்தலைவரிடம் மனு அளியுங்கள் என்றார். கலெக்டரிடம் மனுக்கொடுத்தோம். அவர் அதிகாரியைப் பாருங்கள் என்று சொன்னதோடு சரி. அந்த அதிகாரிகளும் மனுவை ஒன்றுக்கு இரண்டு முறை படித்துவிட்டு அடுத்த வாரம் வாருங்கள் எனச் சொல்லிவிடுகிறார்கள். அவர்கள் இன்று வரையிலும் சரிசெய்யவில்லை. பின்பு பொதுமக்கள் சேர்ந்து பணத்தை போட்டுத் தண்ணீர் பைப்பை சரிசெய்தோம். 

Sponsored


எந்தக் கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் சொன்னால் அவர்களும் நிறைவேற்றுவதில்லை. இந்தநிலையில் இவ்வாறு நடைபெறும் எங்களுடன் வாழக்கூடிய எங்களுக்கான மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் அவர்களிடம் எங்களது குறைகளை கூறி நிவர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும் அரசின் திட்டங்கள் முறையாகக் கிராம மக்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கான உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் உள்ளாட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் எங்கள் கிராமத்தில் இந்த அதிகாரிகளும் அமைச்சர்களும் குடியிருக்க வேண்டும்" எனக் கொந்தளித்தார்கள்.



Trending Articles

Sponsored