ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள்! - கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்



தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்மானங்களை அதிகாரிகள் நிறைவேற்ற மறுத்ததால், மக்கள் கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்தனர்.

Sponsored


துாத்துக்குடி மாவட்டம், ஸ்டெர்லைட் ஆலையின் அருகில் உள்ளது தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தில் தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், குமாரகிரி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கான கிராம சபைக் கூட்டம், தெற்கு வீரபாண்டியபுரத்தில் நடந்தது. தமிழகத்தில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் அரசு அதிகாரியின்  தலைமையில் இந்த கிராமசபைக் கூட்டம் நடந்தது.  தெற்குவீரபாண்டியபுரம் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள்  கூறினர். ஆனால், அதிகாரிகள் அந்த தீர்மானங்களை நிறைவேற்ற மறுத்ததால், கிராம மக்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

Sponsored


இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் கூறுகையில், ”கடந்த மே 1-ம் தேதி  நடந்த கிராம சபைக் கூட்டத்தில், `ஆலையால் மண், நீர் மாசுபட்டுள்ளதால் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தூத்துக்குடியில் இருந்து ஆலையை பிரித்து அகற்ற வேண்டும்’ என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சில தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அதே தீர்மானங்களை  இன்றையக் கூட்டத்திலும் நிறைவேற்ற வேண்டும் என கூறினோம். அதற்கு அதிகாரிகள், `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றக்கூடாது என, மேலதிகாரிகள்  கூறியுள்ளார்கள்’ என உறுதியாகக் கூறி மறுத்து விட்டனர். இதனால் ஊர் மக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து விட்டோம்” எனக் கூறினார். 

Sponsored


இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் ஒன்றிய, திருவரங்கப்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், கிராமத்தில் முறைகேடுகள்  நடந்துள்ளது என பொதுமக்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். இதைக் கேட்ட அதிகாரிகள் கூட்டத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டு அந்த கிராம சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.



Trending Articles

Sponsored