கூட்டுறவு சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மறுகூட்டலுக்கு அனுமதித்த தேர்தல் அலுவலர்!



காஞ்சிபுரத்தில் 52 பருத்தி கூட்டுறவு சங்கம், 22 பட்டு கூட்டுறவு சங்கம் என மொத்தம் 74 கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் 4 கட்டங்களாக 72 கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடந்தன. இதில், ஒரு கூட்டுறவு சங்கத்தைத் தவிர அனைத்துக் கூட்டுறவு சங்கத்திலும் தேர்தல் நடைபெறாமல் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தத் தேர்தலில் வாக்கு மறு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Sponsored


காஞ்சிபுரத்தில் லாபத்தில் இயங்கக் கூடிய கூட்டுறவுச் சங்கத்தில் காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவுச் சங்கம் முக்கியமானது. சுமார் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இந்தக் கூட்டுறவு சங்கத்திற்குத் தலைவர் பதவி முக்கியமானது. இந்த காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவுச் சங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். காமாட்சி அம்மன் கூட்டுறவு சங்கத்தில் மட்டும் தேர்தல் நடந்தது. கூட்டுறவு சங்க தேர்தலில் ஏழு இயக்குநர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அதில் பெரும்பான்மையாக நான்கு உறுப்பினர்களைக் கொண்டவர்களுக்கு தலைவர் பதவி கிடைக்கும்.

Sponsored


சிஐடியு மாவட்ட செயலாளர் முத்துக்குமார், கடந்த முறை தலைவராக பதவி வகித்த ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர். ஸ்டாலின் தரப்பில் போட்டியிட்ட ஸ்டாலின் உள்பட 5 பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஸ்டாலின் தலைவராகவும், ஜெயராமன் என்பவர் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது, 140 வாக்குகள் செல்லாதவை எனத் தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். ‘வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருக்கிறது. செல்லாத வாக்குகளைத் திரும்பவும் எண்ண வேண்டும்’ என முத்துக்குமார், தேர்தல் அலுவலரிடம் (கைத்தறித்துறை துணை இயக்குநர்) கோரிக்கை வைத்தார்.

Sponsored


அந்தக் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையரிடம் கலந்து ஆலோசித்த பிறகு மறுஎண்ணிக்கை நடத்துவதற்கான தேதியை அறிவிப்பதாகவும் தேர்தல் அலுவலர் கூறினார். மேலும், தேவைப்படுமாயின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்படலாம் எனத் தேர்தல் அலுவலர் கூறியிருந்தார். செல்லாத ஓட்டுக்கள் எண்ணப்பட்ட பிறகு, அதில் குறிப்பிட்ட வாக்குகள் செல்லும் என அறிவிப்பு வெளியானால் முத்துக்குமார் தரப்பினர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி இழக்க நேரிடும். மறுஎண்ணிக்கை முடிவை எதிர்பார்த்து இருதரப்பினரும் காத்திருப்பதால், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது கூட்டுறவு சங்கத் தேர்தல்.



Trending Articles

Sponsored