2 லட்சம் கனஅடி நீர் வருகிறது; 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு - கரையோர மக்களை எச்சரிக்கும் கலெக்டர்!Sponsored"கரூர் மாவட்டத்தில், மேட்டூர் மற்றும் அமராவதி அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி மற்றும் அமராவதி ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்தும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்தும் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், மல்லம்பாளையம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடி அளவிலான நீர் திறக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையிலிருந்து 15,000 கன அடியும், பவானி சாகர் அணையிலிருந்து 30,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டுவருகிறது. ஆக மொத்தம், 2 லட்சம் கனஅடி ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டு, கரூர் மாவட்டத்தை வந்தடையும் சூழ்நிலை உள்ளது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை காவிரி ஆறு அகண்ட கரைகளைக் கொண்ட பகுதியாக இருப்பதால், எந்த இடத்திலும் தண்ணீர் புகுந்து சேதம் விளைவிக்க வாய்ப்புகள் குறைவு. இருப்பினும், அதிக அளவிலான நீர் வெளியேற்றப்படும்போது, எந்தெந்த இடங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கணிக்கப்பட்ட இடங்களில் வருவாய்த் துறையினர், வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணிகளில் செயல்பட்டு, அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தொடர்ந்து அறிவுறுத்திவருகின்றனர்.

பாதிப்பு ஏற்படுவதாகக் கருதப்படும் இடங்களில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர். குறிப்பாக, தவிட்டுப்பாளையம் பகுதியில் இரண்டு குடும்பங்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி, மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வருவாய்க் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, கரையோரப் பகுதி மக்களுக்கு விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டும், தண்டோரா மூலமும், ஒலிபெருக்கிவைத்து வாகனங்கள் மூலமும் விழிப்பு உணர்வு
ஏற்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, காவிரி மற்றும் அமராவதி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள், மேடான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவோ, வேடிக்கைபார்க்கச் செல்லவோ, செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கவோ கூடாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், அவசரத் தகவல்கள்குறித்து தெரிவிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியைத் தொடர்புகொள்ளலாம்" என்று அறிவுறுத்தினார்.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored