`சோத்துல கை வைக்கும்போதுகூட அந்த நெனப்புதான் வருது!'- துப்புரவுப் பணியாளர் பேச்சியம்மாளின் 10 வருட சோகம்Sponsored``தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, முகத்துக்கு மாஸ்க், காலுக்கு ஷூ, கையுறை போன்ற எந்த பாதுகாப்பு உபகரணங்களும்  இல்லாமல் பணி செய்கிறார்கள். இவற்றைக் கொடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவதிப்பட்டுவருகிறார்கள்'' என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெபமாலைபுரம் என்ற பகுதியில் உள்ளது, மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு. தஞ்சை நகரப் பகுதியில் பயன்படுத்தப்படும் குப்பைக் கழிவுகள் அனைத்தும் இந்த குப்பைக் கிடங்கில்தான் சேமித்துவைக்கப்படுகின்றன. குப்பைக்கிடங்கு இருக்கும் பகுதியை நெருங்கும்போதே, ஒரு வித துர்நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு மூச்சை அடைக்கும். அந்த சாலைவழியாகச் செல்வோர் அனைவரும் முகத்தை மூடிக்கொண்டுதான் செல்வார்கள். சாதாரணமாக அந்தச் சாலை வழியாகச் செல்வோர்களுக்கே இந்த நிலைமை என்றால், அங்கே பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களின் நிலையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

Sponsored


இந்த மாநகராட்சி குப்பைக்கிடங்கில் மொத்தம் எட்டு துப்புரவுப் பணியாளர்கள் வேலைசெய்கிறார்கள். பேச்சியம்மாள் என்பவரிடம் பேசினோம். ``எனக்கு 53 வயசு ஆகுது. பத்து வருஷமா இந்தப் பணியில் இருக்கிறேன். ஆரம்பத்தில் நகரை சுத்தம்செய்துவந்தேன். பின்னர் அதிகாரிகள் என்னை  குப்பைக்கிடங்குய்க்கு மாற்றிவிட்டார்கள். மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கும் தாங்கமுடியாத துர்நாற்றத்துக்கும் இடையில் சிக்கி  படாதபாடுபட்டேன். அப்புறம், இதான் நம்ம தலையெழுத்து என நினைத்து என்னைத் தேற்றிக் கொண்டேன். விசாலமான இந்த இடத்துல கொட்டிக்கிடக்கிற குப்பைகளில் காலி மதுபாட்டில்கள், தேங்காய் ஓடு போன்ற பொருள்களைத் தனியாகப் பிரித்து எடுப்பதுதான் என் வேலை. இதுபோல சேமிக்கப்படும் மதுபாட்டில்களை  அதிகாரிகள் விற்பனைசெய்து, அந்தப் பணத்தை  நிர்வாகக் கணக்கில் சேர்த்துவிடுவார்கள். குப்பை மற்றும் துர்நாற்றத்திலேயே இருப்பதால், உடம்புக்கு ஏதாவது  நோவு வந்துக்கிட்டே இருக்கும். இந்த வாடை ஒத்துக்காம தலைவலி, வாந்தி, தலை சுற்றல் என எல்லாம் வந்து ரணப்படுத்தும். குப்பைக்கு நடுவே பாம்புகளும் இருக்கும். ஆனா, அந்தப் பாம்புகள்கூட நாங்க படுற கஷ்டத்தைப் பார்த்துட்டு கடிக்காம போயிரும். இதுபோல, பல தடவை நடந்திருக்கு. இவ்வளவு நாற்றத்தையும் தாங்கிக்கிட்டு கஷ்டபடுறது கால் வயிற்று கஞ்சிக்காகத்தான். ஆனா, சோத்துல கைவைக்கும்போதுகூட இந்த குப்பை நினைப்புதான் வருது. என்ன செய்ய, எல்லாம் விதி'' என நொந்துகொண்டார்.

Sponsored


பழனியப்பன் என்பவரிடம் பேசினோம்.  ``நான் ஆறு வருஷத்துக்கு மேல இங்க இருக்கேன். குப்பை மேல நடந்துக்கிட்டிருக்கும்போது உடைந்த பாட்டில் கண்ணாடி ஒண்ணு கால் நரம்புல குத்திருச்சு. ரத்தம் கொட்டிய நிலையில் கீழே இறங்க முடியாம கஷ்டப்பட்டு  இறங்கினேன். காலுக்கு ஒரு ஷூ இருந்திருந்தால் இது நடந்திருக்காது. இங்கு அடிக்கடி தீ பிடித்து எரியும். பெரிய அளவில் எரிந்தால்தான் அணைப்பதற்கு தீயணைப்புத் துறையினர் வருவார்கள். சிறிய அளவில் ஏற்படும் தீ விபத்தை நாங்கள்தான் அணைக்க வேண்டும். ஒரு பக்கம் துர்நாற்றம் மூச்சுவிட முடியாமல் திணறடிக்க, மறுபக்கம் புகை சூழ்ந்துகொள்ளும். அந்த நேரத்தில் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கும்'' என்றார் வேதனையுடன்.

சமூக ஆர்வலர்கள் சிலரோ, ``தூய்மை குறித்து பல திட்டங்கள் பல்வேறு அறிவுரைகள் கூறும் அரசு, அதைச் செய்யும் பணியில் இருக்கும் துப்புரவுப் பணியாளர்களைக் கண்டுகொள்வதே இல்லை. துர்நாற்றம் வீசும் குப்பைக்கிடங்கில்  நம்மால் ஒரு  நிமிடம்கூட நிற்க முடியாத இடத்தில் தன் வாழ்நாள்களை அர்ப்பணித்து வேலை செய்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான, அத்தியாவசியமான பாதுகாப்பு உபகரணங்களைக்கூட மாநகராட்சி  நிர்வாகம் வழங்காமல் பணிசெய்யச் சொல்வது வேதனை. அழுக்கை சுத்தம்செய்யும் பணியில்  அர்ப்பணிப்போடு நகரை சுத்தம்செய்கின்ற அவர்களைக் கொண்டாடவில்லை என்றாலும், தேவையானவற்றைச் செய்து கொடுத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும். உடல் நிலை பாதிக்காமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். இதில் மெத்தனமாக இல்லாமல்  நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
 Trending Articles

Sponsored