ரயில் படிக்கட்டில் பயணிப்பவர்கள் பற்றி ட்விட்டரில் பதிவிடலாம்; ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தகவல்Sponsored``ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வோர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடலாம்'' என ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்தார்.


 

ராமேஸ்வரம் ஓலைக்குடா கிராமத்தில் தமிழக கடலோர பாதுகாப்புக் குழும காவல் பிரிவுக்கான பயிற்சி மையம் அமைய உள்ளது. இதற்கென 238 ஏக்கர் நிலம் ஓலைக்குடா கடற்கரைப் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது கடலோரப் பாதுகாப்புக் குழும காவலர்கள் தற்காலிக மையங்கள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பயிற்சி மையம் அமைய உள்ள பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென ராமநாதபுரம் செய்யதம்மாள் அறக்கட்டளை உதவியுடன் மரம் நடும் விழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்க வந்திருந்த ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, கடலோர பாதுகாப்புக் குழும கண்காணிப்பாளர் அசோக்குமார், கடலோரக் காவல்படை கமாண்டர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் பங்கேற்று புங்கை, சவுக்கு மரக்கன்றுகளை நட்டனர். மேலும், வறட்சியிலும் வளரக்கூடிய பனைமர விதைகளையும் விதைத்தனர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு, ``தமிழகத்தில் ரயில் பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்பயா திட்டத்தின் கீழ் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி படிப்படியாக நடந்து வருகிறது. இதேபோல் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பயணிகளுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ள பிளாட்பார தடுப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. படிக்கட்டுகளில் பயணம் செய்வோருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதை மீறியும் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்கள் குறித்த தகவல்களை படங்களாக எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடலாம். மேலும், இது குறித்த புகார்களைத் தெரிவிக்க 1512 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

ஓலைக்குடா கடலோர பாதுகாப்புக் குழும பயிற்சி மையம் அமைய உள்ள இடத்தில் முதல் கட்டமாக 11 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த விழாவில் ராமேஸ்வரம் டி.எஸ்.பி மகேஷ், செய்யதம்மாள் அறக்கட்டளை நிர்வாகி ஹாரீஸ் அப்துல்லா, தாஹீர் உசைன், ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஜெயகாந்தன், பழனிச்சாமி, தினகரன் மற்றும் என்.சி.சி, என்.எஸ்.எஸ், ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored