ஃபுட் டோர் டெலிவரியில் அசத்தும் திருநங்கை - திருநம்பி தம்பதி!Sponsoredசில மாதங்களுக்கு முன்னர் பெரியார் திடலில் சட்டப்படி சுயமரியாதை திருமணம் செய்த முதல் திருநங்கை - திருநம்பி ஜோடி, பிரீத்திஷா - ப்ரேம் குமார். நாம் விரும்பும் ஹோட்டல்களில் நமக்குப் பிடித்தமான உணவுகளைத் தேர்ந்தெடுத்தால், அந்த உணவை நம் இடத்துக்கே வந்து டெலிவரி செய்துகொடுக்கும் வசதியைத் தற்போது பல தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளனர். அப்படிப்பட்ட தனியார் நிறுவனத்தில், முதன்முதலாக ஒரு திருநங்கை - திருநம்பி ஜோடிகளாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள், பிரீத்திஷா - ப்ரேம் குமார். இதுகுறித்து பிரீத்திஷாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி. நடிப்பு பற்றி எதுவும் தெரியாத காலகட்டத்திலேயே, டெல்லியில் நாடகங்களில் நடிச்சிருக்கேன். அப்புறம், நடிப்பின் மீதிருந்த தீராக்காதலால், ஜெயராவ் மாஸ்டரிடம் நடிப்புப் பயிற்சி பெற்றேன். எனக்கு நடிகை ஆகறதுதான் கனவு. ஆனால், சரியான வாய்ப்புகள் அமையலை. வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்துறது திண்டாட்டமா இருக்குமோன்னு நண்பர் மூலமாக, தொலைக்காட்சி சேனலில் குழந்தைங்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியும் முடிஞ்சுருச்சு. சினிமா மேலே காதல் மட்டுமில்லைன்னா வேற வேலையைப் பார்த்துட்டு பொழப்பை நடத்திட்டுப் போகலாம். ஆனால், சினிமாவைவிட்டு விலக எனக்கு உடன்பாடில்லை.

Sponsored


நானும் ப்ரேமும் எங்களுடைய தேவைகளை நாங்களே பூர்த்திசெஞ்சுக்கிறோம். யாரிடமும் உதவி கேட்கிறது எங்களுக்குப் பிடிக்காது. எங்க அன்றாடத் தேவைகளுக்குப் பணம் தேவை. ப்ரேமுக்காக அந்த தனியார் நிறுவனத்தில் வேலை கேட்டோம். அவங்களோ எனக்கும் கொடுக்கிறதா சொன்னாங்க. நானா தேடிப்போனாலே நிராகரிக்கும் உலகத்தில், அவங்களாகவே கொடுக்கும் வேலையை மறுக்க விரும்பாமல் சம்மதிச்சேன். இது என் சினிமா கனவையும் பாதிக்காது. திடீர்னு ஷூட்டிங் இருந்துச்சுன்னா, லீவ் போட்டுட்டு போறதில் பிரச்னை இல்லை. இத்தனை மணிக்குப் போகணும், இத்தனை மணிக்கு வரணும் என்கிற வரையறையும் இல்லை. வீட்டு வேலைகளை முடிச்சுட்டு வேலைக்குப் போறேன்.

Sponsored


ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஹோட்டல் பெயரும் தெரியாது, ஏரியா பெயரும் தெரியாது. பாதியிலேயே வழி தெரியாமல் நிற்பேன். இந்த மூணு மாசத்தில் தெளிவாகிட்டேன். நல்லா வேலை பார்த்தால், ஒரு நாளைக்கு 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். கொஞ்ச நாளில் ப்ரேமும் இதே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துட்டார். இப்போ எங்க பிழைப்புக்கு ஏற்ற பணத்தை எங்களால் சம்பாதிக்க முடியுது. `ஐங்கரன்', `வெள்ளை யானை' என இரண்டு படங்களில் நடிச்சிருக்கேன். அவற்றின் ரிலீஸுக்காக வெயிட் பண்றேன். அந்தப் படம் வெளியானதும், நிறைய வாய்ப்புகள் வரும்னு நம்புறேன்'' என்கிற ப்ரீத்திஷா தங்களது காதல் டு கல்யாண காலங்களையும் சில வரிகளில் அழகாக ரீவைண்டு செய்தார்.

``ஃபேஸ்புக் மூலம்தான் எனக்கு அவர் அறிமுகமானார். ஒருவரின் வலியை ஒருவர் புரிஞ்சுக்கிட்டோம்; பகிர்ந்துகிட்டோம். காதல் மலர்ந்துச்சு. ஆரம்பத்தில் எங்கள் ரெண்டு வீட்டின் பக்கமும் எதிர்ப்பு, சரியா வருமா, சமூகம் என்ன சொல்லும்னு பயந்தாங்க. பிறகு, என் வீட்டுப் பக்கம் சம்மதிச்சுட்டாங்க. ஆனால், அவர் பக்கம்தான் அவ்வளவு சீக்கிரம் மாறலை. இப்போ, அவங்களுடனும் பேசிட்டிருக்கோம். வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு. உலகின் மீதான நம்பிக்கை அதிகமாகி இருக்கு.

`ஒரு சமூகச் சிந்தனையாளனால் மட்டும்தான் நல்ல நடிகனா இருக்க முடியும்'னு என் மாஸ்டர் சொல்லுவார். எனக்குச் சின்ன வயசிலிருந்தே சமூக சேவையில் அதிக ஈடுபாடு உண்டு. ஒரு நல்ல நடிகையாகவும், பொதுமக்களுக்கு என்னால் முடிஞ்ச சமூக சேவையைச் செய்யறவளாகவும் உயரணும். இதுதான் என் லட்சியம்'' எனப் புன்னகைக்கிறார் பிரீத்திஷா.

கனவு மெய்ப்பட வாழ்த்துகள் தோழி!Trending Articles

Sponsored