`அந்தக் குழந்தையின் முகம் இன்னமும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது'- தொட்டியிலிருந்து மீட்ட கீதா உருக்கம் 



Sponsored



``தொட்டியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் முகம் இன்னமும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது'' என்று துணை நடிகை கீதா தெரிவித்தார். 

சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்.நகர், 6-வது வீதியில் நேற்று அதிகாலையில் மழைநீர் வடிகாலுக்குள்ளிருந்து குழந்தையின் அழுகைக் குரல் கேட்டது. அதிகாலை நேரம் என்பதாலும் மழை பெய்துகொண்டிருந்தாலும் தெருவில் மக்கள் நடமாட்டம் இல்லை. அப்போது பால் சப்ளை செய்யும் சுப்பையா என்பவர் வீடு, வீடாக பால்பாக்கெட்களை விநியோகித்துவந்தார். அவரின் காதிலும் குழந்தையின் அழுகைக் குரல் கேட்டது. உடனே அவர், அழுகைக் குரல் கேட்ட இடத்துக்குச் சென்றார். அங்குள்ள மழைநீர் வடிகால் தொட்டியைச் சுற்றி பூனைகள் நின்றன. தொட்டியைப் பார்த்த சுப்பையா அதிர்ச்சியடைந்தார். 

Sponsored


 உடனே அவர், குழந்தை, குழந்தை என்று சத்தம்போட்டார். சத்தம் கேட்டு துணை நடிகை கீதா என்ற பெண் வெளியில் வந்தார். சுப்பையாவின் சத்தம்கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வந்தனர். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களின் மத்தியில், கீதா உடனடியாகக் களத்தில் இறங்கினார். தரையில் படுத்தபடி தொட்டியிலிருந்த குழந்தையை மீட்டெடுத்தார். அப்போதுதான் அது ஆண் குழந்தை என்று தெரிந்தது. குழந்தையிடமிருந்து முனகல் சத்தம் மட்டுமே கேட்டது. அதுவும் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. உடனடியாக குழந்தைக்கு முதலுதவியைச் செய்தார் கீதா. அதன்பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். தற்போது குழந்தை நலமாக உள்ளது.

Sponsored



 

சுதந்திர தினத்தில் மீட்கப்பட்ட அந்த ஆண் குழந்தைக்கு `சுதந்திரம்' என்று பெயரிட்டு உச்சி முகர்ந்து கொஞ்சினார் கீதா. அவரின் செயலைப் பார்த்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. அவரிடம் பேசினோம். ``நான், சீரியல்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துள்ளேன். தற்போது என்னுடைய மகள் வீட்டில் தங்கியுள்ளேன். சம்பவத்தன்று, பால்காரர் சுப்பையாவின் சத்தம் கேட்டுதான் வெளியில் வந்தேன். அப்போது மழை நீர்க் கால்வாயில் ஒரு குழந்தை கிடந்தது. அதுவும் பிறந்து இரண்டு மணி நேரத்துக்குள்ளான ஆண் குழந்தை அது. அந்தக் குழந்தையின் தொப்புள் கொடிகூட அறுக்கப்படவில்லை. கழுத்தில் சுற்றப்பட்ட நிலையில்தான் தொட்டிக்குள்ளிருந்து குழந்தையை மீட்டெடுத்தேன். நீண்ட நேரம் தொட்டிக்குள் குழந்தை அழுத நிலையில் இருந்ததால், அதற்குமேல் அழக்கூட முடியவில்லை. வெறும் முனகல் சத்தம் மட்டுமே கேட்டது. குழந்தையைச் சுற்றி பூனைகள் நின்றன. பூனைகளால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு காப்பாற்றி விட்டோம். குழந்தையைத் தூக்கியவுடன் என்னுடைய பேரனைத் தூக்கியது போன்ற உணர்வை அடைந்தேன். இன்னமும் அந்தக் குழந்தையின் முகம் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. 

அதைக் கொஞ்சியபோது நான் என்னை மறந்துவிட்டேன். ஏனெனில் என் மகளுக்குத் திருமணமாகி எட்டு ஆண்டுகளாகின்றன. ஆனால் அவளுக்குக் குழந்தை இல்லை. இதனால் தொட்டியிலிருந்து மீட்டெடுத்த குழந்தைக்கு இதுவரை யாரும் உரிமைகோரவில்லை. எனவே, அந்தக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறேன்” என்றார். அப்போது அவரின் கண்கள் குளமாகியிருந்தன.  

 தண்ணீர் இல்லாததால் உயிர் பிழைத்த குழந்தை 

பிறந்த குழந்தையை ஈவு இரக்கமற்றவர்கள் தூக்கிக்கொண்டு தொட்டிக்குள் போட்டுள்ளனர். நல்லவேளை தொட்டியில் தண்ணீர் இல்லை. மழை மற்றும் கழிவு நீர்த் தொட்டிக்குள் புகுந்திருந்தால் நிச்சயம் குழந்தையை உயிரோடு பார்த்திருக்க முடியாது. போலீஸார்  மற்றும் சுகாதாரத் துறை உதவியுடன் குழந்தை `சுதந்திரம்' அரசு மருத்துவமனையில் நலமாக இருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து தகவலையறிந்ததும் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று குழந்தையைப் பார்த்தார். பிறகு குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் குழந்தைக்குத் தாய்ப்பால் வங்கியிலிருந்து இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். குழந்தையை மீட்ட கீதாவை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார்.



Trending Articles

Sponsored