`கருணாநிதி சமாதியை நோக்கி அமைதிப் பேரணி!' - அழகிரி விடுத்த 30 வது நாள் சபதம்Sponsoredதி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அடுத்தகட்ட அதிரடிக்குத் தயாராகி வருகிறார் மு.க.அழகிரி. `கருணாநிதியின் உண்மை விசுவாசிகளை ஒன்று திரட்டி, வரும் 5-ம் தேதி சென்னையைத் திணறடிக்கும் அளவுக்கு அமைதிப் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் அழகிரி' என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள். 

சென்னை, மெரினா கடற்கரையில் கடந்த 13-ம் தேதி கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அழகிரி. அப்போது, 'என்னுடைய ஆதங்கத்தைச் சொல்வதற்காக இங்கு வந்தேன். கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்' எனப் பேட்டி அளித்தார். இந்த இரண்டு வரி பேட்டி, தி.மு.க நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மறுநாள் அறிவாலயத்தில் நடந்த தி.மு.க செயற்குழுவிலும் அழகிரியைப் பற்றி நேரடியாக யாரும் பேசவில்லை.

நேற்று உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் வெளியிட்ட கடிதம் ஒன்றில், ``நாம் நிறைவேற்றி முடிக்க வேண்டிய சவாலான பணிகள் நிறைய இருக்கின்றன. கழக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் சிகரமாக உயர்ந்திருந்த தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் மாநில ஆட்சியாளர்கள். மதவெறியை விதைத்து - மாநில உரிமைகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். தலைவரை இழந்த கழகத்தில் என்ன நடக்கிறது என்பதில் நம்மைவிட ‘அக்கறை’ காட்டுகிறார்கள் அரசியல் எதிரிகள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கலாமா என நப்பாசை கொண்டிருக்கிறார்கள்.

Sponsored


நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்துக்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். ``இந்த வரிகள் அனைத்தும் அழகிரியைக் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டதுதான்" என விவரித்த தி.மு.க நிர்வாகி ஒருவர், `தி.மு.க-வில் பொருளாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் அழகிரி. அவரை மீண்டும் சேர்க்கும் எண்ணத்தில் ஸ்டாலின் இல்லை. இதை உணர்ந்து போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார் அழகிரி. அவரால் தி.மு.க உடைந்துவிடும் என்றெல்லாம் பேசுகின்றனர். 2014-ம் ஆண்டில் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர் அழகிரி. கட்சியிலும் அவர் இல்லை. பிறகு எப்படி கழகம் உடைந்துவிடும் எனப் பேச முடியும்?' எனக் கொந்தளித்தார். 

Sponsored


இந்நிலையில், கருணாநிதி சமாதியை நோக்கி அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டிருக்கிறார் மு.க.அழகிரி. இந்த நிகழ்வை ஒருங்கிணைப்பது குறித்து இன்று தன் ஆதரவாளர்களிடம் தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டார். இதுகுறித்து நம்மிடம் பேசிய அழகிரி ஆதரவாளர் ஒருவர், ``வருகின்ற 5-ம் தேதியோடு கருணாநிதி இறந்து 30 நாள்கள் நிறைவடைய இருக்கின்றன. மதுரையைப் பொறுத்தவரையில், பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால் முப்பதாவது நாள் நிகழ்வை அனுஷ்டிப்பது வழக்கம். அன்று சென்னையில் அமைதிப் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அழகிரி தலைமையில் சென்னை அண்ணாசாலையிலிருந்து கருணாநிதி சமாதி வரையில் இந்தப் பேரணி நடக்க இருக்கிறது.

தமிழகம் முழுவதுமிருந்து 25,000 முதல் 50,000 பேர் வரையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் பங்கேற்கும் நிகழ்வாக அது இருக்கும். அமைதிப் பேரணி முடிந்த பிறகு, கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க இருக்கிறார் அழகிரி. எங்களிடம் பேசும்போதும், `ஸ்டாலினால் கழகத்தையும் நிர்வகிக்க முடியாது. ஆட்சியையும் நடத்த முடியாது. இப்படியே விட்டுவிட்டால், கழகத்தை விற்றுவிடுவார்கள்' என ஆதங்கப்பட்டார். அமைதிப் பேரணியைப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்" என்றார் விரிவாக. Trending Articles

Sponsored