``ஆர்.டி.ஐ தகவல் கொடுத்ததில் தவறு செய்துவிட்டோம்!"- பதறிய துணைவேந்தர் சூரப்பா



அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக, கடந்த வாரம் செய்தி வெளியானது. இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கையிலும் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் பெறப்பட்ட தகவல், மக்களிடையே  மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ``ஆர்.டி.ஐ-யில் தவறான தகவல் இடம்பெற்றுவிட்டது" என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். 

Sponsored


அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்குவதாலும், கட்டணமும் குறைவு என்பதாலும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்கின்றனர். கடந்த வாரத்தில், `அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மறுமதிப்பீட்டில் பணம் கொடுத்து அதிக மதிப்பெண் பெறுகின்றனர். இதன்மூலம் தேர்வுத் துறையில் இருப்பவர்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர்' என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. 

Sponsored


இதுகுறித்துப் பேசிய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, ``மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெற்றுத் தருவதற்கு என்றே மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவித்தார். மறுமதிப்பீட்டு ஊழலில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தேர்வுத் துறையின் முன்னாள் கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் உமா, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரியில் பணியாற்றிய உதவிப் பேராசிரியர்கள் இருவரும்  தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பதிவாளராக இருந்த பேராசிரியர் கணேசனின் பதவியும் பறிக்கப்பட்டது. 

Sponsored


துணைவேந்தர் சூரப்பா, ``அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏதேனும் குளறுபடிகள் நடப்பதுகுறித்து ஆதாரத்துடன் தகவல் வழங்கினால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பையடுத்து, `அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் குளறுபடி நடக்கிறது. இதற்கான ஆதாரம் இதோ' என்று ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நீட் தேர்வு குறித்த வழக்குகளால், மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப்போனது. இதனால் மருத்துவக் கலந்தாய்வுக்கு முன்னரே பொறியியல் கலந்தாய்வு நடந்தது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியிலும் சேர்ந்த மாணவர்கள், பிறகு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததால் மாறியுள்ளனர். கலந்தாய்வுக்குப் பிறகு காலி இடங்களை நிரப்பக் கூடாது என்பது விதிமுறையாக உள்ள நிலையில், இந்தக் காலி இடங்களை யாருக்கும் தெரியாமல் நிரப்பியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

தற்போதைய துணைவேந்தர் சூரப்பா நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, ஓராண்டுக்கும் மேலாக துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இந்தச் சமயத்தில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவே அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தது. அந்தச் சமயத்திலேயே `அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் உயர்கல்வித் துறைச் செயலருக்குத் தொடர்புள்ளது' எனச் செய்தி வெளியானது. 

இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரங்கள் கேட்கப்பட்டன. இதில் வழங்கப்பட்ட தகவலுக்கும், தற்போது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கும் 20 சதவிகிதம் அளவுக்கு வேறுபாடு இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. 

நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால், ``கடந்த 24 ஆண்டாக தமிழ்நாட்டில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்றிவருகிறேன். அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சேர்க்கையில் என்னுடைய தலையீடு இருந்ததில்லை. தவறு செய்யும் இடங்களில் நடவடிக்கை எடுக்கவே செய்கிறேன். தமிழகப் பணியிலிருந்து மத்தியப் பணிக்குச் செல்லும் எண்ணமும் இல்லை" என்று விளக்கம் கொடுத்தார். 

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, ``தகவல் உரிமை பெறும் சட்டத்தின் அடிப்படையில் தவறான தகவல் வழங்கப்பட்டிருப்பதாலேயே மாணவர்களின் எண்ணிக்கையில் வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. தவறான தகவலை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் சேர்க்கையில் எந்தவிதமான முறைகேடும் குளறுபடியும் நடக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

``தவறு நடந்ததை, தகுந்த ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று துணைவேந்தர் சூரப்பா தெரிவித்த பிறகு, ஆர்.டி.ஐ தகவல் வெளியானது. தற்போது, ஆதாரத்தை வெளியிட்டாலும், ``தவறு நடக்கவில்லை" என்று வாதாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சூரப்பா. 

கலந்தாய்வுக்குப் பிறகு, வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு, தொழில்துறையினருக்கான ஒதுக்கீடு என்று மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகம் சேர்த்துள்ளது. ஆனால், இதற்கான விவரங்கள் எதுவும் தெரிவிக்காததால் மாணவர்கள் சேர்க்கைக்கும், தற்போது உள்ள வருகைப் பதிவுக்கும் வேறுபாடு உள்ளது என்று காரணத்தைத் தொகுத்துவருகின்றனர் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.



Trending Articles

Sponsored