12.79 கோடி ஒதுக்கீடு... தரமற்ற சாலை... தேசிய நெடுஞ்சாலை செயலாளருக்கு நோட்டீஸ்!Sponsoredதிருச்சி- ராமேஸ்வரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ``தேசிய நெடுஞ்சாலை எண் 210 திருச்சி - ராமேஸ்வரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையைப் பலப்படுத்தி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு 2017 டிசம்பர் 20-ல் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. கிராம சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளைவிட தேசிய நெடுஞ்சாலைகள் அதிக உறுதித் தன்மையுடன் அமைக்கப்பட வேண்டும். NH 210-ல் திருச்சியிலிருந்து முதல் 10 கி.மீ தொலைவுக்கு சாலையை மேம்படுத்துவதற்கும் மற்றும் சென்டர் மீடியன் அமைப்பதற்கும் 12.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இந்தப் பணிகளுக்கு குறிப்பிட்ட இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என ஒப்பந்த விதிமுறைகள் உள்ளது. ஆனால், இந்த ஒப்பந்ததாரர் விதிமுறைப்படி குறிப்பிடப்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் தரம் குறைந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி சாலைப் பணிகளைச் செய்து வருகிறார். இதனால் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிதாக அமைத்துவரும் சாலைப் பணிகளை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும். மேலும், விதிமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்படும் சாலை மேம்படுத்தும் பணியைக் கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர், தேசிய நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணைக்கு நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored