காவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு! - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் தீவிரம்Sponsoredகல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள 33 ஊராட்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரவுபகலாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்டத்  திட்ட இயக்குநர் மந்திராச்சலம் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள குடிதாங்கி கிராமத்தில் இன்று பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கரைகளின் பலம் எவ்வாறு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் கேட்டறிந்ததோடு  அப்பகுதியில் முகாமிட்டு நிலமையைக் கண்காணித்து வரும் மாவட்ட திட்ட இயக்குநர் மந்திராச்சலம் செய்தியாளர்களிடம் பேசினார்.

Sponsored


``தஞ்சாவூர் மாவட்டம்  பூதலூர் வட்டம் கோவிலடி முதல் கீழணை எனப்படும் அணைக்கரை வரை சுமார் 72 கிலோ மீட்டர் தூரம்  வரை கொள்ளிடம் ஆறு பாய்கிறது. இந்தக் கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள் ஆகிய 5 ஊராட்சி வட்டங்களுக்குட்பட்ட 33 ஊராட்சிகள் அமைந்துள்ளன. மேட்டூர் அணையிலிருந்து இன்றைய நிலவரப்படி சுமார் 2 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணையிலிருந்து சுமார் 50,000 கன அடி நீரும், அமராவதி அணையிலிருந்து சுமார் 25,000 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு சுமாராக 3 லட்சம் கன அடி வரையில் இருக்கும். இந்தத் தண்ணீர் இன்று கல்லணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் தண்ணீரில் சுமார் 24,000 கன அடி நீர் பாசனத்துக்காக காவிரி, வெண்ணாற்றில் திறந்தது போக,  உபரி நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்துவிடப்படும். 

Sponsored


இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் பாபநாசம் வட்டத்துக்குட்பட்ட பட்டுக்குடி, வாழ்க்கை, புதுக்குடி மற்றும் கும்பகோணம் வட்டாரத்துக்குட்பட்ட குடிதாங்கி ஆகிய 4 இடங்கள் தாழ்வான பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வட்டார வளர்ச்சி  அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், பொறியாளர்கள் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் விரைந்து சரிசெய்யத் தேவையான 5,000 மணல் மூட்டைகள், ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் இரவுபகலாகத் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், கடந்த 2004-ம் ஆண்டு சுமார் 4 லட்சம் கன அடி நீர் வந்தபோது சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு, தற்போது கொள்ளிடம் ஆற்றின் கரைகள் சுமார் 2 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, 2004-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது அதிக அளவுக்கு தண்ணீர் வந்தாலும்கூட கரைகள் பலமாகதான் இருக்கும். எதிர்பாராதவிதமாக ஏதேனும் உடைப்புகள் ஏற்பட்டாலும்  விரைந்து அதைச் சரிசெய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளோம்.
ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் தண்ணீரின் அளவு திடீரென உயரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, எந்த செயலுக்காகவும் ஆற்றில் இறங்கவோ, அருகில் வரவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடனும் பொதுமக்கள் இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.Trending Articles

Sponsored