காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 56 குடும்பங்கள்! - முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை செய்யாததுதான் காரணமா?



Sponsored



``காவிரிக் கரையோரம் உள்ள தவுட்டுப்பாளையம் பகுதியில் வெள்ளம் புகுந்து 56 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்" என்று பாதிக்கப்பட்ட மக்கள் புலம்புகிறார்கள்.

கர்நாடகாவில் பெய்யும் கனமழையையால் மேட்டூரிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால்,கரூர் மாவட்டத்தில் உள்ள தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட சில கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியது. இந்த வெள்ளப் பாதிப்பை இன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பார்வையிட்டார். அவரோடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் முதன்மைச் செயலாளர்/கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் ஆகியோரும் தவுட்டுப்பாளையத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஆலோசனை வழங்கினர்.

Sponsored


அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "மேட்டூர் அணையிலிருந்து இன்று 11 மணி நிலவரப்பட்டி திறக்கப்பட்ட உபரி நீர் 1,70,000 கனஅடி வந்துகொண்டிருப்பதால் தாழ்வான பகுதிகளான தவுட்டுப்பாளையம், மல்லம்பாளையம், திருமுக்கூடலூர் ஆகிய பகுதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதையொட்டி, தவுட்டுப்பாளையம் தாழ்வான குடியிருப்புப் பகுதியில் வெள்ள நீர் நுழைந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த 56 குடும்பங்களிலுள்ள 157 நபர்கள் சமுதாயக்கூடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடைகள், போர்வைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் பொது மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ள நீர் தொடர்பாக ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. விழிப்பு உணர்வு பதாகைகள் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, காவல் துறையினர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றங்கரையோரப் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பாக மேடான பகுதிகளுக்குச் செல்ல தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்" என்றார்.

Sponsored


ஆனால், பாதிக்கப்பட்ட மக்களோ, "தம்பிதுரை சொல்வது பொய். இப்போது வெள்ளம் வந்தபிறகு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுகிறார்கள். வெள்ளம் வரும் முன்புதானே எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்? நேற்று இரவே வெள்ளம் திடீர்ன்னு வந்துட்டு. நேற்று காலை அல்லது மாலையே எசரிக்கை கொடுத்திருக்கணும். மாவட்ட நிர்வாகம் கொடுக்கலை. இதனால், இரவில் திடீர்ன்னு வெள்ளம் வந்து வீடுகளுக்குள் புகுந்து எங்களது பொருள்கள், ஆவணங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களை அடிச்சுகிட்டு போய்ட்டு. இதுக்குக் காரணம் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்குதான்" என்று வெடித்தார்கள்.



Trending Articles

Sponsored