நீதிமன்றத் தீர்ப்புப்படி யானைகள் பாதையிலிருக்கும் ரிசார்ட்டுகள் சீல் வைக்கப்பட்டதா? #SpotVisit



Sponsored



யானைகளின் வலசைப் பாதையில் இருக்கின்ற முறையாக அனுமதி பெறாத 39 ரிசார்ட்டுகளை உடனடியாக சீல் வைக்க உச்ச நீதிமன்றம் கடந்த 9 தேதி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து 10ம் தேதி குறிப்பிட்ட 39 ரிசார்ட்டுகளுக்கும் 48 மணி நேர கால அவகாசம் கொடுக்கப்பட்டது. சட்டபூர்வமாக  அனுமதி பெற்றிருந்தால் அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும் 39 ரிசார்ட்டுகளுக்கும் மாவட்ட நிர்வாகம் அவகாசம் கொடுத்திருந்தது. 48 மணி நேர அவகாசம் முடிந்தவுடன் எல்லா ரிசார்ட்டுகளும் சீல் வைத்து மூடப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். 

12 தேதி சீல் வைக்கிறார்கள் எனத் தெரிந்ததும் உண்மையில் வலசைப் பாதையில் இருக்கிற ரிசார்ட்டுகளைத்தான் மாவட்ட நிர்வாகம் சீல் வைக்கிறதா? இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என அறிய நேரடியாக மசினகுடிக்கு கிளம்பினோம். உதகையில் இருந்து காலை 8 மணிக்கு கல்லட்டி வழியாக மசினகுடிக்கு காரில் கிளம்பினோம். 

காலை 11 மணிக்கு மசினகுடி அடிவாரத்தில் இருக்கிற உள்ளத்தி பகுதியில் க்ளண்டன் ரிசார்ட்டில் நான்கைந்து அரசு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ரிசார்ட்டின் முகப்பு கேட் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. ரிசார்ட் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளேயிருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்திருந்தனர்.  ரிசார்ட்டில் உதகை  DRO திரு நாகராஜன் தலைமையில் சீல் வைப்பதற்காகக் காத்திருந்தனர். ரிசார்ட்டின் பின் பகுதியில் மான்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. சரியாக நண்பகல் 12 மணிக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. முதலில் வரவேற்பறைக்கு சீல் வைத்தனர். பின்னர் ஒவ்வொரு அறையாகச் சென்று எல்லா அறைகளுக்கும் சீல் வைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கும் பணி நடந்தது. ஓர் அறையில் சீல் வைக்க முயன்ற போது அதன் நிர்வாகிகள் அந்த அறை ரிசார்ட் நிர்வாகிகள் தங்கும் இடம் என முறையிட்டார்கள். அதிகாரிகள்  RDO அதிகாரியிடம் பேசிய பின்பு அந்த அறையை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லா அறைகளுக்கும் சீல் வைத்தனர். சீல் வைத்தது குறித்து ரிசார்ட் உரிமையாளரிடம் கேட்டதற்கு “சீல் நடவடிக்கை குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை" எனக் கூறிவிட்டனர். 

Sponsored


Sponsored


DRO திரு நாகராஜனிடம் கேட்டதற்கு  RDO சுரேஷ் என்பவரின் தலைமையில் இரண்டு குழுக்களாக பிரிந்து சீல் வைக்க இருப்பதாகக் கூறினார். மொத்தம் 39 ரிசார்ட்டுகள் சீல் வைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, ஆனால் 27 ரிசார்டுகள் தான் இன்றைக்கு சீல் வைக்கப்படுகிறது. மீதமுள்ள 12 ரிசார்ட்டுகளும் அனுமதிச் சான்றிதழ் வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அனுமதிச் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி  பின்னர் நடை பெறுவதாகவும் கூறினார். 

அடுத்து கடநாடு பகுதியிலுள்ள தீனதயாளன் என்கிற ரிசார்ட்டுக்கு சீல் வைக்கப் போவதாக கூறினார். சீல் வைக்கிற ரிசார்ட்டுகளைத் தவிர்த்து அனுமதிச் சான்றிதழ்களை வைத்திருக்கும் ரிசார்ட்டுகளை பார்க்கலாம் என முடிவு செய்து பொக்காபுரம் பகுதிகளில் சீல் வைக்கும் பட்டியலில் உள்ள சில  ரிசார்ட்டுகளை நோக்கி பயணித்தோம். 

பொக்காபுரம் கோவிலை ஒட்டியிருக்கிற எல்லா ரிசார்ட்டுகளின் பெயரும்  WILD, FOREST, ADVENTURE, THRILLER, என சாகச விரும்பிகளைக் கவரும் வண்ணம் வைக்கப்பட்டிருந்தன.     பட்டியலிலிருக்கிற ஒரு ரிசார்ட் வனப்பகுதிக்குள் இருக்கிறது. அதற்கென தனிச்சாலை அமைத்திருக்கிறார்கள். சாலையின் இடது புறம் தனியார் நிலமொன்றில் வேலி அமைத்து "தனியார் நிலம்" எனப் பெயர் பலகை வைத்திருக்கிறார்கள். அதற்குள் மான்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. மான்கள் கூட்டம் வெளியேற வேண்டுமானால் கம்பி வேலியைக் கடந்துதான் வெளியே  வர வேண்டும். ஒரு மான் தன்னுடைய கொம்பை வேலிக்குள் நுழைத்து வெளியேற முயன்றதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. உண்மையில் ரிசார்ட்டுகள் இருக்கிற இடம் யானைகளின் வலசைப் பாதை மட்டுமல்ல, மான்களின் பாதையும்தான்.  

அதைக் கடந்து உள்ளே சென்றால் ஆற்றுக்கு இடையே சிறிய பாலம் ஒன்றை ரிசார்ட் நிர்வாகத்தைச் சார்ந்தவர்கள் அமைத்திருக்கிறார்கள். ரிசார்ட்டுக்குள் அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கிய சான்றிதழ்களைச் சரி பார்த்துக் கொண்டிருந்தனர். வனப்பகுதிக்குள் மூங்கில் மரங்களைக் கொண்டு வீடு அமைத்திருக்கிறார்கள். விலங்குகள் நடமாடும் பகுதி என்பது பார்த்ததுமே தெரிய வந்தது. சான்றிதழ்களைச் சரி பார்த்துக் கொண்டிருந்த அரசு அதிகாரிகளுக்கு ரிசார்ட் நிர்வாகம் சரியான பதில்களை அளிக்கவில்லை. பல கேள்விகளுக்கு தெரியவில்லை என்றே பதிலளித்தார்கள். சான்றிதழ் சரி பார்க்கும் பணி நிறைவடைந்ததும் அரசு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினார்கள். குழுவில் இருந்த திரு மோசஸ் என்பவரிடம் கேட்டதற்கு "சான்றிதழ்களைச் சரிபார்த்தோம். சில ஆவணங்கள் குழப்பமாக இருக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்தான் முடிவெடுப்பார்" எனச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

சீல் வைக்கும் பட்டியலில் உள்ள மேலும் சில ரிசார்ட்டுகளுக்கும் சென்று பார்த்தோம். எல்லா ரிசார்ட்டுகளுமே வனப்பகுதியை ஒட்டியே அமைந்திருந்தன. சில ரிசார்ட்டுகளை பார்த்த பொழுது எப்படி இவற்றூகு அனுமதி கொடுத்தார்கள் என்கிற கேள்வி எழுந்தது. இது குறித்து சீல் வைக்கும் பணிக்கு தலைமை ஏற்ற RDO சுரேஸ் அவர்களிடம் பேசினோம். "27 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைத்துவிட்டோம் மீதியுள்ள 12 ரிசார்ட்டுகளின் ஆவணங்களைச் சரிபார்த்து கொண்டிருக்கிறோம். முறையான அனுமதியில்லாத ரிசார்ட்டுகள் வருகிற வெள்ளிக்கிழமைக்குள் (17-08-18) சீல் வைக்கப்படும் என்றார். 

மாலை ஆறு மணிக்கு மசினகுடியில் இருந்து கிளம்பும் போது முதலில் சீல் வைக்கப்பட்ட க்ளெண்டன் ரிசார்ட்டின் கேட்டை மீண்டும் பொருத்தியிருந்தார்கள். சீல் வைக்கிறார்கள் எனத் தெரிந்ததும் முகப்புகேட்டை அகற்றியிருந்தார்கள். சீல் வைக்கும் பணி முடிந்ததும் மீண்டும் கேட்டை பொருத்தியிருக்கிறார்கள்.

ரிசார்ட் நிர்வாகிகள் என்ன காரணம் கூறினாலும் ரிசார்ட்டுகள் யானைகளின் வலசைப் பாதையில் அல்ல, விலங்குகளின் வசிப்பிடத்தில்தான் கட்டப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. 



Trending Articles

Sponsored