"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்!"  - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusiveSponsoredமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி சென்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அங்கு அவரைச் சந்திக்க வந்தவர்களிடம், ' சட்டசபையில் அம்மா படம் திறப்பு விழாவுக்குக்கூட எதிர்ப்பு தெரிவித்தார் ஸ்டாலின். கருணாநிதி சமாதி விவகாரத்தில், ஸ்டாலின் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும்' எனக் கொதிப்பைக் காட்டியிருக்கிறார் .

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்ததையடுத்து, அவசரப் பயணமாக டெல்லிக்குக் கிளம்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. விமானத்தில் பிசினஸ் வகுப்பில் டிக்கெட் கிடைக்காததால், இண்டிகோ விமானத்தின் எகானமிக்கல் வகுப்பில் ஏறி, இன்று அதிகாலை 2 மணியளவில் டெல்லி சென்றடைந்தார். தமிழ்நாடு இல்லத்தில் சில மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு, கிருஷ்ணமேனன் பார்க்கில் உள்ள வாஜ்பாயின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார். அங்கிருந்து நேராக தமிழ்நாடு இல்லம் திரும்பியவர், தன்னை சந்திக்க வந்தவர்களிடம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தார். 

இந்த சந்திப்பில், எட்டு வழிச்சாலை, மெரினா சமாதி விவகாரம், முல்லைப் பெரியாறு விவகாரம் ஆகியவை குறித்து விவாதம் நடந்துள்ளது. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ' எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி ராமச்சந்திரனுக்கு மெரினாவில் இடம் கொடுப்பது குறித்து பேச்சு வந்தபோது, ' இடம் கொடுக்க வாய்ப்பில்லை' என கருணாநிதியே கைப்பட எழுதி கையெழுத்துப் போட்டிருக்கிறார். சிட்டிங் முதல்வர்களுக்கு மட்டும்தான் மெரினாவில் இடம் கொடுக்கப்படுகிறது. சி.எம் ஆக இருந்த அம்மா இறந்துவிட்டார். அவரது உருவப்படத்தை சட்டசபையில் திறந்தோம். அந்த நேரத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் எந்தவித தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்துக்கு வரவில்லை. உடனே, ' குற்றவாளியின் படத்தைத் திறப்பதா?' என எந்தவொரு நியாயமான காரணங்களும் இல்லாமல் தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்போது, அவர்களுக்கு என்று வரும்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சமாதி விவகாரத்தில், நாங்கள் அவர்களை மிகச் சாதாரணமாக நடத்தவில்லை. அண்ணா யுனிவர்சிட்டிக்கு எதிரில் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தைத்தான் கருணாநிதிக்கு சமாதி அமைப்பதற்காக ஒதுக்கினோம். அது மிகவும் மதிப்பு மிகுந்த இடம். 

Sponsored


Sponsored


அதன் பிறகும், ராஜாஜி ஹாலில் இடம் கொடுத்தது முதல் பாதுகாப்பு தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம். சமாதி அமைப்பதில் இருக்கும் சட்டரீதியான சிக்கல்களையும் ஸ்டாலினிடம் விளக்கினோம். இவர்கள் போட்ட வழக்கே, இவர்களுக்குத் தடையாக இருந்ததால் வாபஸ் பெற்றுவிட்டார்கள். இந்த விவகாரத்தில், முதலில் ஸ்டாலின் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்' எனக் கொதித்திருக்கிறார்.  அதன்பிறகு, முல்லைப் பெரியாறு விவகாரம் பற்றி பேச்சு வந்தபோது, ' இறைவன் எங்களுக்குத் துணையாக நின்று அள்ளிக்கொடுத்துவிட்டான். தற்போது அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தி, 152 அடி உயரம் வரையில் தண்ணீரை சேமிக்கலாம் என உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. இதையும் 139 அடி ஆக குறைக்க வேண்டும் என கேரளா வழக்கு போட்டிருக்கிறது. அணையிலிருந்து வரும் நீரில்தான் அவர்கள் மின்சாரம் தயாரிக்கிறார்கள். ஆனால், அந்த அணையின் செயல்பாட்டுக்கு அவர்கள் மின்சாரத்தைக் கொடுப்பதில்லை. ஜெனரேட்டர் மூலமாகத்தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்' என ஆதங்கப்பட்டவர், 

' நான் ஆட்சியில் அமர்ந்துகொண்டிருக்கும் இந்தத் தருணம், பல்வேறு சவால்கள் நிரம்பியதாக இருக்கிறது. இருப்பினும், சுமுகமாக ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான்கில் மூன்று பங்கு தொகுதிகளில் உறுதியாக வெல்வோம். 30 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். பல்வேறு தேர்தல்களில் பல்வேறு கூட்டணிகள் அ.தி.மு.க-வுக்குள் வந்தாலும், எடப்பாடி தொகுதியை விட்டு நான் நகரவில்லை. அந்த அளவுக்கு அந்த மக்கள் என்மீது அன்பு வைத்திருக்கிறார்கள்' என நெகிழ்ந்து போய் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 
 Trending Articles

Sponsored