`மனு கொடுத்து வெறுத்துப்போனார்கள்..!' - தண்ணீர் தொட்டிக்கு மாலை போட்டு ஒப்பாரி வைத்த ஊர் மக்கள்



திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆண்டுக்கணக்கில் தண்ணீர் வராத குடிநீர் தொட்டிக்கு ஊர் மக்கள் மாலை போட்டு, ஒப்பாரி வைத்து இறுதிச் சடங்கு செய்தனர்.

Sponsored


திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள கிராமம் கிருஷ்ணாபுரம். இங்கு சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தக் கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது ஒரு குடம் தண்ணீர் ஐந்து ரூபாய் என விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் வெறுத்துப்போன ஊர் மக்கள், வித்தியாசமான முறையில் தங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த முடிவு செய்தார்கள். அதன்படி, காலையில் ஊர் மக்கள் மொத்தமும் ஓர் இடத்தில் கூடினார்கள். பிறகு, துக்க வீட்டுக்குச் செல்வதுபோல் மாலை எடுத்துக்கொண்டு ஆண்கள் முன்னால் போக, பெண்கள், தலையில் முக்காடுப் போட்டுக்கொண்டு காலிக்குடங்களுடன் அழுதபடியே பின்னால் சென்றனர். ஊரில் இருந்த தண்ணீர் வந்து நீண்டநாள் ஆகிய, தண்ணீர் தொட்டியை அடைந்தார்கள்.

Sponsored


Sponsored


தொட்டிக்கு மாலை போட்டு, பெண்கள் அருகே அமர்ந்து ஒப்பாரி வைத்தார்கள். இந்த நூதன போராட்டம் ஒருமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. ஆனாலும், அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் கிராம மக்கள் அவர்களாகவே கலைந்து சென்றனர். இது தொடர்பாகப் பேசிய கிராம மக்கள், ``எங்கள் கிராமத்தைப் புறக்கணிக்கிறார்கள். எந்த அடிப்படை வசதியும் இங்கு இல்லை. குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். மாவட்ட நிர்வாகம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும். இல்லாவிட்டால், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளைத் திண்டுக்கல் ஆட்சித்தலைவரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறோம்'' என்றனர்.



Trending Articles

Sponsored