உயர் நீதிமன்றம் `குட்டு' எதிரொலி - ராஜினாமா செய்தார் நீதிபதி ரகுபதி; காரையும் ஒப்படைத்தார்!



புதிய தலைமைச் செயலகம் கட்டட முறைகேடு வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் நீதிபதி ரகுபதி ராஜினாமா செய்துள்ளார்.

 

Sponsored


2010-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சியின்போது ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதை, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் திறந்துவைத்தனர். ஆனால், அதன்பின் வந்த அ.தி.மு.க அரசு, அதைப் பயன்படுத்தாமல், பழைய தலைமைச் செயலகத்தையே பயன்படுத்தியது. மேலும், புதிய தலைமைச் செயலகத்தைப் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியதுடன், தலைமைச் செயலக கட்டுமானத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி, நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் ஒன்றையும் அ.தி.மு.க அரசு அமைத்தது. இந்த ஆணையம், முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டது. 

Sponsored


இதற்கிடையே, இந்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து சமீபத்தில் தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ``விசாரணை ஆணையத்துக்குத் தடை விதித்த பின்பும், கடந்த 3 ஆண்டுகளாக ஆணையத்துக்கு அரசு நிதி ஒதுக்கிவருகிறது' எனக் குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், `தடை செய்யப்பட்ட ஆணையத்துக்காக அரசு நிதியை வீணடிப்பது கண்டனத்துக்குரியது. தலைமைச் செயலக கட்டுமானத்தில் ஊழல் நடந்திருந்தால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இது மாதிரியான நடவடிக்கை, நீதித்துறைமீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைக்காதா" எனக் கூறி ஆணையத்தைக் கலைக்க உத்தரவிட்டது. 

Sponsored


நீதிமன்றத்தின் இந்தக் கண்டனத்தை அடுத்து நீதிபதி ரகுபதி விசாரணை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தைத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள அவர், தனது விசாரணை ஆவணங்கள், கணினி மற்றும் கார் ஆகியவற்றையும் அரசிடம் ஒப்படைத்தார். ராஜினாமா குறித்து கருத்து கூறியுள்ள நீதிபதி ரகுபதி, ``விசாரணை ஆணையம் பற்றி உயர் நீதிமன்றம் கூறிய கருத்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஓய்வுபெற்ற பிறகு, ஏதேனும் பதவியைத் தேடிச் செல்வதைப்போல் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. சம்பளம் வாங்காமல்கூட மௌலிவாக்கம் கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்தினேன். ஆணையத்துக்கான தடையை நீக்கப் பலமுறை முறையிட்டும் விசாரிக்கவே இல்லை" எனக் கூறியுள்ளார். 



Trending Articles

Sponsored