உண்டியல் காசை கேரளாவுக்கு அனுப்பிய தேவகோட்டை பள்ளி மாணவர்கள்!Sponsoredழை வெள்ளத்தால் கேரள மாநில மக்கள், சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். பல மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி, இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்திவருகிறது. மலைப்பிரதேசங்களில் மண் சரிவு ஏற்பட்டு, மக்கள் சிக்கிக்கொள்ளும் அவலமும் ஆங்காங்கே நடந்துவருகிறது. இதனால், அந்த மக்களின் குடியிருப்பும் உடைமைகளும் சேதமாகிவருகின்றன. இயற்கையின் இந்தச் சீற்றத்தைச் சமாளிக்கும் வகையில், பல்வேறு 

மாநிலங்களிலிருந்து உதவிக்கரங்கள் நீண்டு வருகிறது. கேரள மாநில முதல்வர் இந்த ஆண்டின் சுதந்திர தின விழாவை எளிமையாகக் கொண்டாடி, அதன்மூலம் மிச்சப்படும் பணத்தை வெள்ள நிவாரணத்துக்குப் பயன்படுத்தவும் முடிவெடுத்துள்ளார். அம்மாநில ஆளுநர் தனது ஒரு மாதச் சம்பளத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார். தமிழக அரசும் மக்களும் நிவாரண நிதி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருள்களையும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்நிலையில், கேரள மக்களின் துயரத்தைப் போக்க, தங்களால் இயன்ற உதவியாக உண்டியலில் சேமித்த பணத்தை அனுப்பியுள்ளனர், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள். இது குறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கத்திடம் பேசினேன்.

```சிறுவர்கள் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அதன்மூலம் கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும்' என்கிறார் விவேகானந்தர். இந்தச் செய்தியை முன்பு ஒரு பத்திரிகையில் படித்தேன். இதை மாணவர்களிடம் கூறி, ஒவ்வொரு வகுப்பறையிலும் ஓர் உண்டியலை ஏற்பாடு செய்தேன். அதன்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பறைகளிலும் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் தங்கள் வீட்டில் செலவுக்காகக் கொடுக்கப்படும் காசில் ஒரு பகுதியைச் சேமிக்கிறார்கள். சென்னை வெள்ளத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் மாணவர்களின் உண்டியல் சேமிப்பு மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு என 8,000 ரூபாய் மதிப்புள்ள போர்வைகளை அனுப்பிவைத்தோம். பிறகு, பாட்டியும் பேரனும் மட்டுமே இருக்கும் ஒரு குடும்பம் பற்றி செய்தி படித்தோம். அந்தப் பேரனுக்கு ஏற்பட்ட நோய்க்கான சிகிச்சை உதவித்தொகையாக 6,000 ரூபாய் கொடுத்து உதவினோம்.

Sponsored


Sponsored


இந்த இரண்டு சம்பவங்களும் மாணவர்களுக்குள் நல்ல மனமாற்றத்தை உருவாக்கியிருக்கின்றன. நாம் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் கஷ்டப்படும் யாரோ ஒருவருக்கு உதவுகிறது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதனால், சேமிப்பதில் இன்னும் அதிக ஆர்வம் காட்டினர். இப்போது, கேரளாவில் வரலாறு காணாது வெள்ளம் வந்து, மக்கள் அல்லல்படுகிறார்கள். இதை அறிந்ததும், இதுவரை சேமித்திருக்கும் உண்டியல் பணத்தை அனுப்பலாம் என மாணவர்கள் கூறினர். அதன்படி, அனைத்து வகுப்புகளிலும் உள்ள உண்டியல் பணத்தைத் திரட்டினோம். 1000 ரூபாய்க்கும் மேலாக இருந்தது. அத்துடன் நானும் மற்ற ஆசிரியர்களும் அளித்த தொகையைச் சேர்த்து 8,000 ஆயிரம் ரூபாயாக, கேரள மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு ஆன்லைனில் அனுப்பிவைத்துள்ளோம். எங்களின் தொகையைப் பெற்றுக்கொண்டதற்கான ரசீதையும் அனுப்பிவைத்தனர். 

இதுகுறித்து, அடுத்த நாள் பிரேயரிலும் பேசினேன். அப்போது 8-ம் வகுப்புப் படிக்கும் காயத்திரி, `எங்கள் வீட்டுக்கு அருகே இருந்தவர்களிடம் கேரள வெள்ளம் பற்றிக் கூறினேன். `எங்களுக்கெல்லாம் இதுவரை தெரியவில்லையே' என்று கேட்டு வருத்தப்பட்டனர்' என்றார். இன்னொரு மாணவர் பேசுகையில், `இந்த முறை என்னால் உதவ முடியவில்லை. இதுபோல துயரம் இனி வரக் கூடாது. ஒருவேளை அப்படி வரும்பட்சத்தில் நிச்சயம் உதவுவதற்கு முயல்வேன்' என்றான்.

பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தையும் பழக்கத்தையும் மாணவப் பருவத்திலே ஊட்டினால், அவர்கள் பெரியவர்களானதும் ஆரோக்கியமான மாற்றம் சமூகத்தில் ஏற்படும் என நிச்சயமாக நம்புகிறேன். அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிவது, இந்தத் துயரமான நேரத்திலும் சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது" என்கிறார் சொக்கலிங்கம்.

சேமிப்பு என்பது நமக்கானது என்பதாக மட்டுமன்றி, பிறருக்காகவும் என்றாகும்போது, அதன் மதிப்பு இரண்டு மடங்காக உயர்கிறது என்பதை இந்தப் பள்ளி மாணவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள். வாழ்த்துகள் மாணவர்களே!Trending Articles

Sponsored