முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - தமிழக அதிகாரியை மிரட்டிய கேரள போலீஸ் அதிகாரி!Sponsoredமுல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரியை, கேரள போலீஸ் அதிகாரி மிரட்டிய சம்பவம் சமூக வலைதளங்கள் மூலமாகப் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மழை காரணமாக கடந்த 15-ம் தேதி 142 அடியை எட்டியது முல்லைப்பெரியாறு அணை. மூன்றாவது முறையாக 142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு மழை காரணமாக அதிகரித்துக் காணப்படுவதால், நீர் வரத்துக்கு ஏற்ப தமிழக, மற்றும் கேரள பகுதிகள் வழியாகத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், அணையில் அதிக தண்ணீர் தேக்கக் கூடாது என்றும் கேரளப் பகுதிக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் எனவும் முல்லைப்பெரியாறு அணையில் பணியில் இருந்த தமிழக பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வினுடன், அணை பாதுகாப்புப் பணியில் இருந்த கேரள போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சலீம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

Sponsored


``அணைக்கு எவ்வளவு நீர் வருகிறதோ அதைக் கணக்கிட்டுதான் நீர் திறக்க முடியும், அணை பாதுகாப்பில் இருக்கும் நீங்கள் சொன்னதும் நீர் திறக்க முடியாது" என சாம் இர்வின் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சலீம், கடுமையான வார்த்தைகளால் சாம் இர்வினை திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார். உடனே அணையின் செயற்பொறியாளர் சுப்பிரமணியத்திடம் கூறியுள்ளார் சாம் இர்வின். சுப்பிரமணி, தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். கூடவே, இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்த தகவல்கள் வாட்ஸ்அப்பில் உலா வந்தது. 

Sponsored


இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் கூறும்போது, ``சம்பவம் நடந்தது உண்மை. இரு மாவட்ட கலெக்டர்களிடமும் பேசி பிரச்னையை சரி செய்திருக்கிறோம். இனி இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். முன்னதாக அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாகக் குறைக்க வேண்டும் எனக் கேரள முதல்வர், தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். இது ஒரு புறம் என்றால், அணையின் நீர் மட்டத்தை 138 அடியாகக் குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றார் இடுக்கியைச் சேர்ந்த ஒருவர். இரு மாநில அதிகாரிகளும் இணைந்து ஆய்வு செய்து 138 அடியாகக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம். 

இது தொடர்பாக தேனி மாவட்ட விவசாயிகள் கூறும்போது, ``இதே உச்சநீதிமன்றம்தான் 2014-ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை பலமாக இருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றது. இப்போது இப்படிச் சொல்கிறது. ஒரு புறம் கேரள முதல்வர் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கச் சொல்கிறார். இன்னொரு புறம் அணையில் இருக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி மிரட்டப்படுகிறார். பாதுகாப்பாக, பலமாக இருக்கும் முல்லைப்பெரியாறு அணையைப் பார்த்து ஏன் இவ்வளவு பதறுகிறார்கள் என்றுதான் புரியவில்லை!” என்றனர்.

Sponsored