`எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம்!'- கொள்ளிடம் டூ காட்டூர் வரை கண்காணிக்கும் குழுக்கள்கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்குப் பருவமழை கனமழையாக கொட்டித் தீர்ப்பதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து வரலாற்று நிகழ்வாக அதிகரித்து வருகிறது. ஆகவே, உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14-ம் தேதி 90,000 கன அடிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றில் நீர் வெளியேறியபோதே கிராமங்களில் விளை நிலங்கள், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

Sponsored


16.08.2018 அன்று மாலை கீழணையிலிருந்து 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து இன்று 2.50 லட்சம் கனஅடி நீர் வெளியேறும் என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கருதுகின்றனர். கீழணையிலிருந்து கொள்ளிடம் கடலில் சங்கமிக்கும் பகுதியான காட்டூர் வரை கடும் பாதிப்பு ஏற்படும் எனவும், பலவீனமான கரையோரங்கள் உடைப்பெடுத்தால் பாதிப்பை தடுக்கவும் பொதுப்பணித் துறை பணிகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு கீழணை முதல் சித்தமல்லி வரை உதவி செயற்பொறியாளர் மரியசூசை தலைமையிலும், சித்தமல்லி தொடங்கி கொள்ளிடம் வரை உதவி செயற் பொறியாளர் செந்தில் தலைமையிலும், கொள்ளிடம் முதல் காட்டூர் வரை சீர்காழி உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையிலும் குழுக்கள் அமைத்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Sponsored


கொள்ளிடம் பகுதியில் வெள்ள பாதிப்பு இடங்களாக வாடி, கோபாலசமுத்திரம், நாதல்படுகை, முதலைமேடு திட்டு, அளக்குடி ஆகிய ஊர்கள் அடையாளம் காணப்பட்டு கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், எஸ்.பி.விஜயகுமார் நேரில் ஆய்வு செய்து வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இது குறித்து நாகை மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் கூறுகையில், ``கொள்ளிட கரையோர மக்கள் ஆற்று நீரினால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை சீர்காழி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் சேகர் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 60 மாநில பேரிடர் பயிற்சி முடித்த காவலர்கள், 20 தாலுகா காவலர்கள், 60 ஆயுதப் படை காவலர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆணைக்காரன்சத்திரம் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

Sponsored


மேலும், நீச்சல் தெரிந்த 17 தன்னார்வலர்கள் படகுகளுடன் தயார் நிலையிலும், கொள்ளிடம் ஆற்றின் நீர்வரத்தைக் கண்காணிக்கவும், பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களைக் கண்காணிக்கவும் 24 மணிநேரமும் இயங்கும் வெள்ளத் தடுப்புக் காவல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட அலுவலகத்தில் இயங்கி வருகிறது. மேலும், வெள்ளம் தொடர்பான தகவல் மற்றும் அவசர உதவிக்கு 04365-243024 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.Trending Articles

Sponsored