பக்ரீத் பண்டிகை; எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை!Sponsoredபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு விற்பனை இரண்டு மடங்காக உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

தென்மாவட்டங்களில் சிறப்பு பெற்ற ஆட்டுச் சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையும் ஒன்று. இச்சந்தையில் விரும்பும் இன ஆடுகள்,  திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமல்லாமல், விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை எனச் சுமார் 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும் பொது மக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில் சராசரியாக 2,000  முதல் 3,000 ஆடுகள் வரை விற்பனையாகி வருகிறது.

Sponsored


Sponsored


தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பக்ரீத், பொங்கல் ஆகிய பண்டிகைகளின்போது இந்தச் சந்தையில் ஆடுகள் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும். இந்த ஆண்டு வரும் 22-ம் தேதி பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ளதால் இன்று இச்சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. கன்னி ஆடு, கொடி ஆடு, செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, வெம்பூர் பொட்டுப்போர், ராமநாதபுரம் வெள்ளை, பட்டிணம், கச்சகட்டி, மேச்சேரி, சேலம் கறுப்பு, கோயம்புத்தூர் குரும்பை எனப் பல இனங்களைச் சேர்ந்த சுமார் 10,000 ஆடுகள் வரை இன்று விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன.

ஆட்டின் எடைக்கு ஏற்ப குறைந்த பட்சமாக ரூ.3,000 முதல் அதிகபட்சமாக ரூ.28,000 வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத் பண்டிகைக்கு இஸ்லாமியர்கள் வெள்ளாட்டைவிட செம்மறி ஆடுகளை அதிகளவு தேர்வு செய்து வாங்கியதால், செம்மறி ஆட்டுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகளும் பொது மக்களும் தெரிவித்தனர். ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததுபோல, ஆடுகள் வாங்க வந்த மக்களின் கூட்டமும் கடந்த ஆண்டைவிட கணிசமான அளவு அதிகமாகக் காணப்பட்டது.

இன்று ஆடுகளின் வரத்து எண்ணிக்கை 10,000-க்கும் மேல் இருந்தது. விலையும் அதிகம் என்பதால் இன்று ஒருநாள் மட்டும் சுமார் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு விற்பனை இரண்டு மடங்காக உள்ளதால் வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Trending Articles

Sponsored