`ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்’ - குடிநீருக்கு வழியில்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மக்கள்!Sponsoredபருவமழை காரணமாக கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கடவுளின் தேசமான கேரளா வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் மயமாகக் காட்சி அளிக்கின்றன. ஆனால், குடிநீருக்கு வழியில்லாமல் தவிக்கிறது திண்டுக்கல் என்பதுதான் சோகம்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 20 எம்.எல்.டி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாக மாநகராட்சியின் குடிநீர்த் தேவைப் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி ஆற்றில் 3 லட்சம் கன அடி தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. கரூர் மாவட்டம், புதுப்பாளையம் அருகே திண்டுக்கல்லுக்குத் தண்ணீரை கொண்டு வரும் தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல்லுக்குத் தண்ணீரை ஏற்றும் தலைமை நீரேற்று நிலையம் தற்போது செயல்பட முடியாத நிலையில் உள்ளது. இந்தப் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீரேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகுதான் இங்கிருந்து திண்டுக்கல்லுக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது.

Sponsored


எனவே, திண்டுக்கல்லின் நீராதாரங்களில் முக்கியமான ஆதாரமாகக் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குப் பலனளிக்காது. இனி, ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை. துரதிர்ஷ்டவசமாக நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுகிறது. தற்போது சிறிய குட்டையாக மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்தத் தண்ணீரை மோட்டார் மூலமாக உறிஞ்சி திண்டுக்கல்லுக்குக் கொண்டுவருகிறார்கள். இதன் மூலம் 2 எம். எல். டி தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. தினசரி 20 எம்.எல்.டி தண்ணீர் தேவையுள்ள இடத்தில் 2 எம்.எல்.டி தண்ணீரை வைத்து எப்படிச் சமாளிப்பது என மாநகராட்சி அதிகாரிகள் கையைப் பிசைந்து கொண்டுள்ளனர். இந்தத் தண்ணீரும் குறைந்து வருகிறது. வெள்ளம் வடியத் தாமதமானாலும், ஆத்தூர் அணைப் பகுதிகளில் மழை தாமதமானாலும் திண்டுக்கல் மாநகருக்கு குடிநீர் விநியோகம் முற்றிலும் இல்லாமல் போகும் அபாயக் கட்டத்தில் இருக்கிறது.

Sponsored


இந்நிலையில், இன்று மாநகராட்சி சார்பாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், `தற்போது கிடைக்கும் 2 எம்.எல்.டி தண்ணீரை அனைவரும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடிநீர்த் தேவையைத் தவிர பிற தேவைகளுக்கு இந்தத் தண்ணீரைக் பயன்படுத்தக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில் குடிக்க கூடத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது திண்டுக்கல். இந்த நகருக்கான பிரத்தியேக குடிநீர்த் திட்டங்கள் ஏதும் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.Trending Articles

Sponsored